ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை நடிகர் தனுஷ் ரீமேக் செய்ய உள்ள செய்தி உண்மையாக இருந்தால், முறையான அனுமதி பெற்று பண்ண வேண்டும் என்றும் இல்லையென்றால், தனுஷ் மீது வழக்கு தொடரப்படும் என்று மூத்த இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இயக்குனர் விசு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தது. அது உண்மை என்றால் தனுஷ் இதைக் கேட்கவும். உரிமைக்காக கவிதாலயா நிறுவனத்திடம் பேசியிருப் பீர்கள். பட நெகடிவ் உரிமை தங்களிடம் இருப்பதால் கதை உரிமையையும் விற்கிறார்கள். சம்சாரம் அது மின்சாரம் படத்தை ஒவ்வொரு மொழியிலும் விற்றபோது என்னிடம் சம்மதம் கேட்டு ஒரு தொகை கொடுப்பார் சரவணன் சார். கவிதாலயாவில் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிகளுக்கு விற்கபட்ட போதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலசந்தருக்காக வாயை மூடிக்கொண்டிருந்தேன். தனுஷ் நீங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறீர்களா? உரிமையை கவிதாலயாவிடம் வாங்கிவிட்டீர்களா?
அதன் திரைக்கதை, வசனகர்த்தா நான். வேறு யாரிடமும் கேட்கவேண்டாம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள். யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். நெற்றிக்கண்ணைப் பொறுத்தவரை நான்கு தூண்களாக வேலை செய்தவர்கள். எஸ்.பி. முத்துராமன், இளையராஜா, அன்றைய கவிதாலயா (பிரமிட்) நடராஜன், நான். அதெப்படி, எனக்குத் தெரியாமல் நெற்றிகண் உரிமையை அவர்கள் விற்க லாம், இவர்கள் வாங்கலாம்? இதுதான் நிறைய எழுத்தாளர்க ளுக்கு நேர்ந்துகொண்டிருக் கிறது. கதை அதிகாரம் எழுத்தாளரிடம் தான் உள்ளது. தயாரிப்பாளரிடம் நெகடிவ் உரிமை இருந்தால் மட்டும் போதாது. அப்படி எல்லா உரிமைகளையும் அளித்தாலும் விற்கும்போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். வயிற்றெரிச்சலாக உள்ளது. ரீமேக் உரிமையில் இயக்குநர்கள் பல லட்சங்கள் வாங்குகிறார்கள். நான் இரண்டு வாழைப் பழம் கூட வாங்கவில்லை.
தனுஷ், நீங்கள் படம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கு தொடுத்தால் நீங்கள் வருத்தப் படக்கூடாது. அதனால் தான் இப்போதே சொல்லிவிடு கிறேன். இதை நேரடியாகப் பேசியிருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். நீங்கள் இயக்கிய பவர் பாண்டி படத்தின் அடிப்படைக் கதையும் பெண்மணி அவள் கண்மணி படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் அடிப்படையும் அதுதானே. இதை ஒரு கல்யாணத்தில் உங்கள் அப்பாவும், ராஜ்கிரண் கதாபாத்திரம் உங்கள் கதாபாத்திரத்தின் சாயல் போல இருந்தது என்றார்.
அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றுக்கொண்டு நெற்றிக்கண் படத்தை நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் மாமனாருக்கு (ரஜினி) அமைந்ததுபோல உங்களுக்கும் மைல்கல்லாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு விசு அதில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.