லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சௌபின் ஷாஹிர், தமிழில் அறிமுகமாகிறார். அவரது அறிமுகம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களும், அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
கூலி படத்தின் மோனிகா பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலில் சௌபின் ஷாஹிர், நடிகை பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ஆடிய நடனம் இணையத்தில் வைரலாக பரவியது. அவரது துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க நடன அசைவுகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. இதன் மூலம் குறுகிய காலத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பான நட்சத்திரமாக சௌபின் மாறினார்.
சமீபத்தில் நடைபெற்ற கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சௌபினைப் பற்றிப் பேசியது தான் தற்போது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. லோகேஷ் முதலில் இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசிலை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர் கிடைக்காததால் சௌபினைத் தேர்வு செய்ததாக ரஜினி தெரிவித்தார். 'சுடானி ஃப்ரம் நைஜீரியா', 'கும்பளங்கி நைட்ஸ்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சௌபின் ஷாஹிர்.
இவரை பற்றி பேசிய ரஜினிகாந்த், ஆரம்பத்தில் சௌபினைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும், அவரது தோற்றம், குறிப்பாக அவரது வழுக்கைத் தலை காரணமாக, அவர் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவராக இருப்பாரா என சந்தேகம் ஏற்பட்டதாகவும் ரஜினி வெளிப்படையாகக் கூறினார். "சௌபின் யார்? எந்தெந்தப் படங்களில் நடித்திருக்கிறார்?" என்று லோகேஷிடம் கேட்டதாக ரஜினி தெரிவித்தார். "மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர்" என்று லோகேஷ் கூறியுள்ளார்.
ஆனாலும், ரஜினிக்கு சந்தேகம் நீடித்திருக்கிறது. ஆனால் லோகேஷின் முழு நம்பிக்கையைக் கண்டு ரஜினி அமைதியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். படப்பிடிப்பின் போது, முதல் இரண்டு நாட்கள் சௌபினின் காட்சிகளைப் படம்பிடிப்பதில் லோகேஷ் ஈடுபட்டிருந்ததாகவும், மூன்றாவது நாள் ரஜினி படப்பிடிப்பிற்கு வந்தபோது, சௌபினின் காட்சிகளைப் பார்த்ததாகவும் தெரிவித்தார். "நான் சௌபினின் காட்சிகளைப் பார்த்தேன், எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! என்ன ஒரு நடிகர்! அவருக்கு என் சல்யூட்!" என்று ரஜினி மனந்திறந்து பாராட்டினார்.
ரஜினியின் இந்தப் பாராட்டு ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், அவரது ஆரம்பகால கருத்துக்கள், குறிப்பாக சௌபினின் உடல் தோற்றம் குறித்த அவரது பேச்சுகள், சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின. ரஜினி ஒரு திறமையான நடிகரைப் பாராட்டியது பாராட்டுக்குரியது என்றாலும், அவரது உடல் தோற்றத்தை மையப்படுத்திப் பேசியது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு நெட்டிசன், எக்ஸ் தளத்தில், "இதே போன்ற கருத்துக்கள் சிரஞ்சீவி, பாலய்யா, மோகன்லால் அல்லது அமிதாப் பச்சன் போன்றவர்களிடமிருந்து வந்திருந்தால், இவர்களை இப்படி விட்டிருப்பார்களா? குறைந்தபட்சம் ஒரு வாரமாவது சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்திருப்பார்கள். ரஜினி அனுபவிக்கும் சலுகை உண்மையிலேயே வேறு" என்று பதிவிட்டிருந்தார்.
கூலி படத்தில் ரஜினியுடன், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ள 'Coolie' திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.