இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ற் கொண்டாடப்படும், நடிகர் ரஜினிகாந்த்துக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தலைவா உங்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி என்று பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல தலைமுறைகளாக புகழ்பெற்றவர். இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருந்து கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!
நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், “உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.