திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு சென்னையில் சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து பேசிய ரஜினிகாந்த் , "கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ இருக்க முடியாது. நான் ஹீரோ ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. பைக், வீடு இருந்தால் போதும் என்றுதான் இருந்தேன். அப்படிப்பட்ட மனநிலையில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது கலைஞானம் சார் என்னை திடீரென்று பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.
Advertisment
பைரவி படத்திற்கு பின்னர் நானும் கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கலைஞானம் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது. வருத்தமாக உள்ளது. கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சொன்ன அமைச்சருக்கு நன்றி. அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன். கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித் தருகிறேன்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 3 படுக்கை அறை வசதி கொண்ட ஒரு வீட்டை கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து கலைஞானர் அவர்கள் கூறுகையில், "விருகம்பாக்கத்தில் வீடு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, ரஜினிக்கு தகவல் தெரிவித்தோம். அப்போது அவர் மும்பையில் இருந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக ரெஜிஸ்டர் நடைபெற்று, இப்போது அந்த வீட்டிற்கு வந்துவிட்டோம்" என்றார்
இதையடுத்து, சரஸ்வதி பூஜை தினமான இன்று காலை புது வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த், பூஜையறையில் குத்து விளக்கேற்றி, பாபா படம் ஒன்றையும் கலைஞானத்துக்கு பரிசளித்தார். கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக உருக்கத்துடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார் கலைஞானம்.