நடிகர் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அண்ணாத்த படப்பிடிப்புக்காக இன்று தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவது கட்டாயம். இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று முழக்கத்தை உருவாக்கி தனது ஆன்மீக அரசியலை பரபரப்பாக அறிவித்தார். தான் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இன்னும் 40% பணிகள் மட்டுமே தன்னுடையது இருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு நடித்து முடிப்பேன் என்று உறுதி கூறினார்.
இதையடுத்து, அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய ரஜினிகாந்த், நேற்று (டிசம்பர் 12) பெங்களூரில் தனது 71வது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
ரஜினிகாந்த்யின் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/rajini-went-to-hyderabad-300x225.jpg)
இந்த நிலையில், ரஜினிகாந்த் தான் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத்துக்கு இன்று தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்காந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் ரஜினியின் உடல் நிலை காரணமாக அவரை ரசிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், நடிகர் ரஜினிகாந்த் தான் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு அண்ணாத்த படத்தில் அவருடைய பகுதியை நடித்துக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுவதால் படிப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் தனி விமானத்தில் இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததும் சென்னை திரும்பி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil