ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் ஜெயிலர் படத்தில் எந்த நடிகர் எந்த கேரக்டரில் நடித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன் லால், தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… தமன்னா எப்படி வந்திருக்கிறார் பாருங்க!
எனவே, ஜெயிலர் திரைப்படம் வெளியாக 10 நாட்களே இருக்கும் நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்கு பிறகு எந்த கதையும் எனக்கு சரியாக அமையவில்லை. அப்போது தான் நெல்சன் ஜெயிலர் படத்தின் ஒன்லைன் கதையை சொன்னாரு, கதை எனக்கு பிடித்து விட்டது. பீஸ்ட் படம் வெளியானது 20 நாள் கழிச்சு ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் பீஸ்ட் வெளியான பிறகு அதன் விமர்சனம் சரியாக இல்லை. உடனே எனக்கு சில விநியோகஸ்தர்கள் ஃபோன் பண்ணி, படத்தின் விமர்சனம் சுமாரா இருக்கு. நெல்சன் தான் பண்ணனுமா என கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்கள் என்றார்கள். எப்போதுமே டைரக்டர்கள் தோற்க மாட்டார்கள். அவர்கள் எழுதின சப்ஜெக்ட் தான் தோற்றுப்போகும், எனவே நெல்சனே இயக்கட்டும் என்று முடிவெடுத்தேன் என நெல்சனை பாராட்டி பேசினார்.
இந்தநிலையில், இந்த திரைப்படத்தில் யார் யார் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அவரின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். நடிகை தமன்னா தெலுங்கு நடிகையாக நடித்து உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் தெலுங்கு நடிகையாக நடித்திருப்பதால் காவாலா பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil