அபூர்வ ராகங்கள் முதலே கமலுக்கு போட்டி ரஜினிதான்: அப்போது சினிமாவில் இப்போது அரசியலில்

ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான நேற்று, தன்னுடைய அரசியல் வருகையை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்தார். காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.

மனோஜ் குமார், இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான நேற்று, தன்னுடைய அரசியல் வருகையை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்தார். இந்த முடிவு காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தியை சரிசெய்யவும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் ஒரு அரசியல் கட்சியும் தலைமையும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இம்மாதிரியான சமயத்தில், தனிக்கட்சி ஆரம்பித்து சரியில்லாத சிஸ்டத்தை சரிசெய்வோம் என ரஜினி கூறியிருக்கிறார்.

சினிமாவில் தனக்கு ஜூனியரான ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், “சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள். வருக வருக”, என பதிவிட்டார்.

ரஜினிகாந்த் தன் அரசியல் வருகையை அறிவிக்க இத்தனை ஆண்டுகளை வீணடித்தபோது, கமல்ஹாசன் அவ்வாறு இல்லாமல் அவரை முந்தினார். அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கமல்ஹாசன் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். ரஜினிக்கு முன்பாகவே அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசினார். ஆனால், அரசியலில் தன்னுடைய நிலைபாட்டை அறிவிக்கவே ரஜினி 20 ஆண்டுகள் மேல் எடுத்துக்கொண்டார்.

சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் ரஜினிகாந்த் – கமல்ஹாசனுக்கு இடையே போட்டி தொடர்கிறது.

கே.பாலச்சந்தரின் அலுவலகத்தில் ரஜினியை பார்த்தபோதே அவரை தன்னுடைய போட்டியாளராக கருதிக்கொண்டதாக கமல்ஹாசன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயிற்சி பெற்ற பிறகு ரஜினிகாந்த், நடிப்பு வாய்ப்புக்காக இயக்குநர் கே.பாலச்சந்தரை நாடினார். அப்போது, புதிய திரைப்படத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் நல்ல கதாபாத்திரத்தை வேறு யாருக்கோ கொடுத்துவிடுவாரோ என்ற பயம் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டிருக்கிறது. விழாவொன்றில் இதுகுறித்து பேசிய கமல், “கே.பாலச்சந்தர் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு நடிகர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நல்ல கதாபாத்திரத்தை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவாரோ என்ற கலக்கம் எனக்கு ஏற்பட்டது. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து நிறைய பேர் ஆடிஷனுக்கு வந்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்துகூட ஒருவர் வந்திருந்தார். ஆனால், அவர் கே.பாலச்சந்தரை ஈர்க்கவில்லை.”, என கூறினார்.

“அந்த ஆடிஷனை பாலச்சந்தரின் அலுவலகத்தின் சிறிய ஜன்னலில் இருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஒருவர் இருந்தார். நீங்களும் புனே இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்தவரா என விசாரித்தேன். அப்போது, நான் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்தவன் என கூறினார். அவர்தான் ரஜினிகாந்த்”, என முதன்முதலில் ரஜினியை சந்தித்த அனுபவத்தை கமல் பகிர்ந்துகொண்டார். “பாலச்சந்தர் சாருக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. நல்ல கதாபாத்திரம் அவருக்கு சென்றுவிடுமோ என நான் கவலையானேன்”, என கமல் கூறினார்.

அப்போது, தனது புதிய திரைப்படத்தில் ‘”நீதான் ஹீரோ”, எனவும், ரஜினிகாந்த் சிறிய கதாபாத்திரத்தை ஏற்பார் எனவும் கே.பாலச்சந்தர் கமல்ஹாசனிடம் கூறி அமைதிப்படுத்தினார். அப்போதே, ரஜினிகாந்த் சினிமாவில் தனக்கு போட்டியாக இருப்பார் என கமல்ஹாசனுக்கு தோன்றியுள்ளது. இப்போது அரசியலிலும்.

அதன்பின், கே.பாலச்சந்தர், சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றி 1975-ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் உட்பட சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். குறிப்பாக, கமல்ஹாசன் திரைப்படங்களில் இரண்டாம் நிலை கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பின், பைரவி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு நிகழ்ந்தவை எல்லாம் வரலாறு.

கே.பாலச்சந்தர் தன்னை தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தன்னை உயரத்திற்கு கொண்டு செல்லப்போவதாகவும் அவர் கூறியதாகவும் ரஜினிகாந்த் கடந்த சனிக்கிழமை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.

பல படங்களில் ஒன்றாக நடித்த பிறகு, இனி இருவரும் இணைந்து நடிக்கக்கூடாது என, ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருகட்டத்தில் முடிவெடுத்தனர். ஆனால், திரைக்கு பின்னால் நல்ல நண்பர்களாக திகழ்ந்தனர்.

இருவரும் திரையில் வெவ்வேறு வடிவங்களில் மக்களை அனுகினார். நடிப்புக்கான ஆய்வு பெட்டகமாக கமல்ஹாசன் உருவெடுத்தார். அதேவேளையில், மாஸ் ஹிட்டை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்துக் கொண்டே இருந்தார்.

இருவருக்கும் பல வேறுபாடுகள் உண்டு. கமல்ஹாசன் நாத்தீகர். ரஜினிகாந்த் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். ”காவி என்னுடைய நிறமல்ல”, என கமல் கூறினார். ஆனால், ரஜினிகாந்த் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன், பின்பு அக்கருத்திலிருந்து பின்வாங்கினார். ஆனால், ரஜினிகாந்த் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தெரிவித்த ஆதரவை இன்றளவும் தொடர்கிறார். இப்படி இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பல விஷயங்களில் இருவரும் முரண்பட்டாலும், இவர்களுக்குள் ஒற்றுமையும் உண்டு. இருவரும் திறம்மிக்க அரசாங்கத்தை அமைப்போம் என உறுதிகொண்டுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் நலமே முதன்மையானது என தெரிவித்துள்ளனர். அதிகாரத்துக்காக கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட மாட்டோம் எனவும் உறுதி தெரிவித்துள்ளனர்.

“நான் கேட்டதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான பணத்தையும், புகழையும் நீங்கள் எனக்கு தந்தீர்கள். அதனால், நான் அவற்றுக்காக அரசியலுக்கு வரவில்லை. பதவியும் எனக்கு தேவையில்லை. 1996-ஆம் ஆண்டிலேயே பதவி என்னை தேடி வந்தது. ஆனால், நான் அதனை புறக்கணித்துவிட்டேன். 45 வயதில் எனக்கு பதவி ஆசை இல்லை, 68 வயதிலா எனக்கு பதவி ஆசை வரும்?”, என ரஜினிகாந்த் தன் ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி

×Close
×Close