வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அங்கு, புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி மற்றும் மற்ற உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் சமீபததில் வேட்டையன் படத்தை முடித்துவிட்ட நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். கூலி படம் தொடங்குவதற்கு முன்பாக ஓய்வு எடுப்பதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அபுதாபியில் உள்ள பிரபல தொழிலதிபர் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரஜினிகாந்தின் செயல்பாடுகளைச் சுற்றியுள்ள பரபரப்புக்கு மத்தியில் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியுடனான ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு நடந்தது. அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை வளர்ப்பதில் முக்கிய நபரான யூசுப் அலி, ரஜினிகாந்துடன் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
லுலு குழுமத்தின் சிஓஓ சைஃபி ரூபாவாலாவையும் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் படத்தையும் சைஃபி சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு, “இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாயில் ஓய்வு எடுத்த பிறகு, இந்தியா திரும்பும் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜின் கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார். இது அவரது 171வது படம். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“