மூத்த நடிகரும், இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான விசு சமீபத்தில் கவிதலயா புரொடக்ஷன்ஸ் தனது படங்களின் ரீமேக் உரிமையை தனது அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ரஜினிகாந்த் நடித்த நெற்றிகண் (1981) படத்தை ரீமேக் செய்வதில் தனுஷ் ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியானபோது, இந்த பிரச்னை தொடங்கியது. இந்தப் படத்தை இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருந்தார். நெற்றிகண் ரீமேக் குறித்த செய்தி உண்மையாக இருந்தால், ஒரிஜினல் கதையை எழுதிய தன்னிடமும் தனுஷ் அனுமதி பெற வேண்டும் என்று விசு கூறியிருந்தார். தற்போது இது குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா விளக்கமளித்துள்ளது.
கவிதாலயா விளக்கம்
Advertisment
Advertisements
அதில், “கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத் தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ் திரையுலக ஜாம்பவான் கே.பாலச்சந்தரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக்காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால், ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை.
மேலும், கவிதாலயா எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.
இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். அது குறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கைவெளியிடப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது.
அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களைஅணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் இயக்குநர் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.
மேலும், விசு, கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன்நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.