மனோஜ் குமார் ஆர் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் கொடிக்கட்டி பறக்கிறது. அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களுமே பல கோடிகளில் வசூலை திரட்டியது.
வெறும் 7 மாதத்திற்குள்ளேயே, ரஜினியின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இவ்வளவு குறைந்து காலத்திர்கு அதிகமான ரஜினி படங்கள் வெளியாவது அபூர்வமானது தான். முன்பெல்லாம் சூப்பர்ஸ்டாரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்தின் ரிலீசுக்கும் சுமார் 1.30 வருடம் இடைவேளையாவது இருக்கும்.
ரஜினிகாந்த் என்னும் வசூல் நாயகன்
ரஜினியின் ஆரம்ப காலத்தில், ஒரே ஆண்டில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகும். உதாரணத்திற்கு, 1978ம் ஆண்டு பைரவி படத்தின் மூலம் கதாநாயகநாக அறிமுகமானார். அதே ஆண்டு மட்டும் பல மொழிகளில் சுமார் 21 படங்கள் வெளியாகி புதிய சாதனை படைத்தது.
ஆனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த ரஜினிக்கு குறைந்த காலத்திற்குள் காலா, 2.0 மற்றும் பேட்ட என மூன்று படங்கள் வெளியானது ரசிகர்கள் மற்றும் திரையரங்கு விநியோகிஸ்தர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான ஜி. தனன்ஜெயன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் பேசுகையில், “ரஜினி மீண்டும் தியேட்டர்களில் கொண்டாட்டத்தை கொண்டு வந்துவிட்டார்” எனக் கூறினார். மேலும், “7 மாதத்தில், ரஜினியின் 7 படங்கள் வெளியாகி அதிக வசூலை திரட்டியிருக்கிறது. குறிப்பாக, தமிழ் திரைப்படங்கள் தான் அதிகப்படியாக வருவாயை இந்த ஆண்டு திரட்டியது.” என்றும் தெரிவித்தார்.
கடந்த 40 வருடங்களாக சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ரஜினி மீண்டும் தனக்கே உரிய ஸ்டைலில் திரும்பியிருக்கிறார். அதிலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக சூப்பர்ஸ்டார் அறிவித்திருக்கிறார்.
இவருடைய போட்டி நாயகனான கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் மூலம் ஏற்கனவே அரசியலில் களமிறங்கிவிட்டார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து நிரந்தரமாக விடுபடப் போவதாக உலகநாயகன் அறிவித்திருக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்த் தனது என்ன செய்ய இருக்கிறார் என்பதை இரகசியமாகவே வைத்திருக்கிறார். அரசிலுக்கு வருவேன் என அறிவித்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிப்பதால் மக்களும் ஏமாற்றம் அடைவதில்லை.
“பொதுமக்கள் யாரும் அவரின் அரசியல் வாழ்க்கை பற்றி பெரிய கவலைக் கொள்வதில்லை. அவர்களுக்கு ரஜினி நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் தான் விருப்பம் உள்ளது” என பிரபல விநியொகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் பேசிய தனன் ஜெயன், “டாப் ஹீரோக்களான விஜய், அஜித் மற்றும் சூர்யா போன்றவர்கள் ஒரு படத்திற்கும் மேலாக நடிக்க வேண்டும் என்பதற்கு ரஜினி உதாரணமாக இருக்கிறார்” என்றார்.
“மூன்று படங்களுக்கு மேல் நடிப்பது ரஜினி போன்றவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை. அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியானது இப்போது மே 1ம் தேதி மற்றொரு படமும் வெளியாக போகிறது. இது ஆரோக்கியமான ஒன்று தான். ஒவ்வொரு நடிகரும் ஒரு வருடத்திற்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும்” என சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வசூல் எண்ணிக்கையை பொருத்தவரை, உலக அளவில் ரஜினிகாந்தின் மூன்று படங்களும் ரூ. 1000 கோடி வரை வசூலித்துள்ளது. வர்த்தத் துறையினர் சிலர் கணக்கின்படி, உலக அளவில், காலா 150 கோடியும், 2.0 படம் 700 கோடியும், பேட்ட 15 நாட்களில் 100 கோடியும் திரட்டியிருக்கிறது என்றார்.
பிப்ரவரி மாதத்தின் முடிவில், தமிழகத்தில் மட்டும் பேட்ட படம் 120 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் பேட்ட படம் சுமார் 65 கோடியை வசூலித்திருக்கிறது.
காலா, 2.0 மற்றும் பேட்ட ஆகிய மூன்று படங்களும் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. “சூப்பர்ஸ்டார் தவிர மற்ற எந்த ஹீரோக்களின் படமும் இத்தகைய வசூலை திரட்டி கொடுப்பதில்லை” என விநியோகிஸ்தர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.