முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகமெங்கும் அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்றைய தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அந்த வகையில் தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அவருடைய உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பங்கேற்றார். ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ரஜினிகாந்த் மலர்த் தூவி அஞ்சலி செலுத்திய பின் அவருடன் தீபா, மாதவன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜெயலலிதா உயிருடன் இல்லாவிட்டாலும் அவருடைய நினைவு அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும். ஜெயலலிதாவை அவருடைய இல்லத்தில் இதுவரை 3 முறை சந்தித்துள்ளேன். தற்போது 4 ஆவது முறையாக வேதா இல்லத்திற்கு வருகை தருகிறேன்” என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.