மாபெரும் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்தக் கட்டமாக 'ககன்யான்' விண்கலம் மூலம் விண்வெளிக்கு முதன்முதலாக மனிதர்களை அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கும் நம்மிடம், சினிமா பைரசியை ஒழிக்க தொழில் நுட்பமோ, குறைந்தபட்சம் வழிமுறைகளோ கூட இல்லை.
பைரசியால் தமிழ்த் திரையுலகமே ஆட்டம் கண்டுக் கொண்டிருக்கிறது. டாப் 10 நடிகர்களை மட்டும் வைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா, பல தியேட்டர்கள் மால்களாக மாறிக் கொண்டிருப்பதை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும், இப்பிரச்சினைக்கு முடிவுக்கு வராமல் தத்தளித்து வருகிறது தமிழ் திரையுலகம்.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி வெளியான 'பேட்ட' படத்தை தமிழக அரசு பேருந்துகளிலேயே ஒளிபரப்பியுள்ளனர். கரூரிலிருந்து சென்னை வந்த தமிழக அரசுப் பேருந்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்காக வீடியோ ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போதாவது தமிழக அரசு பைரசி தொடர்பாக நடவடிக்கை எடுங்கள். இதோ தமிழக அரசுப் பேருந்தில் புதிய படங்கள் திரையிடப்படுவதற்கான ஆதாரம்" என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா நடித்து கடந்த 10ம் தேதி வெளியான பேட்ட திரைப்படம், பல வசூல் சாதனைகளை தகர்த்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.