ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கெஸட் ரோலில் நடித்துள்ள லால் சாலம் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் 9 வருட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் லால் சலாம். விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் மொயிதீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லால் சலாம் படம் பிப்ரவரி 9-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பேசியது இணையத்தில் வைரலாக பரவியது. படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், விஷ்ணு விஷால், மத அடையாளத்தால் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லீம் இளைஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டிரெய்லர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் டிரெய்லரை தனது வீட்டில் பார்த்ததும், மகளின் இயக்கம் குறித்து பெருமையாக பேசிய வீடியோ பதிவும் தற்போது வெளியாகியுள்ளது,
இந்த வீடியோ ஆன்லைனில் வைரலாகப பரவி வருகிறது, மேலும் ரஜினிகாந்த் தனது வீட்டில் டிரெய்லரைப் பார்க்கிறார். படம் உருவான விதத்தைப் பற்றி உற்சாகமாகவும் பெருமையாகவும் பேசுவது போல் தெரிகிறது. லெட்ஸ்ஃபேம் செயலி நிறுவனர் அஜ்மல் மற்றும் ஹஜ் அசோசியேஷன் அபூபக்கர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விருந்தினர்களாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“