சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் டேராடூன் சென்றடைந்தார். கடந்த காலங்களில் இமயமலைக்கு ஆன்மீக பயணங்களை மேற்கொண்ட ரஜினிகாந்த், தற்போது மேலும் பல புனித குகைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
ஜெய்பீம் புகழ் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மன்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வேட்டையன் படம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் ஓய்வெடுப்பதற்காக அபுதாபி சென்றார். அவருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. இதற்கு ரஜினிகாந்த் அபுதாபி அரசாங்கத்திற்கும், விசாவைப் பெறுவதற்கு ஆதரவளித்த லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ. யூசுப் அலிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், “அபுதாபி அரசாங்கத்திடமிருந்து மதிப்புமிக்க ஐக்கிய அரபு அமீரக அரசிடம் இருந்து கோல்டன் விசாவைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று வீடியோ ஒன்றில் கூறினார்.
அபுதாபியில் உள்ள பச்சோசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா என்ற இந்து கோயிலுக்கு சென்று ரஜினிகாந்த் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அபுதாபியில் சுமார் வாரம் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் பின்னர் சென்னை திரும்பினார்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, சில ஆண்டுகள் இமயமலைக்கு செல்லாமல் இருந்தார்.
கடந்த ஆண்டு, ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இமயமலைக்கு சென்று, பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் வைலானது.
இந்நிலையில், அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், மே 29-ம் தேதி சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இமயமலை ஆன்மீக சுற்றுப் பயணத்தைத் தொடங்க, சென்னையில் இருந்து டேராடூனுக்கு விமானம் மூலம் சென்றடைந்தார்.
கடந்த காலங்களைப் போலவே, இமயமலைக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், தற்போது மேலும் பல புனித குகைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து புறப்பட்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு வந்து தனது பயணத்தை தொடங்கினார்.
டேராடூன் விமான நிலையத்தில் ரஜினிகாந்த் தனது ஆன்மீக பயணம் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். “ஒவ்வொரு ஆண்டும் நான் புதிய அனுபவத்தைப் பெறுவேன், அது என்னை மீண்டும் மீண்டும் ஆன்மீக பயணத்தைத் தொடர வைத்தது. இந்த முறையும் புதிய அனுபவங்களைப் பெறுவேன் என்று நான் நம்புகிறேன்” என்று கூறிய ரஜினிகாந்த் இந்த பயணங்கள் தனது வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“