இளையராஜா 75 நிகழ்ச்சியில் தம்மை விட கமல் ஹாசன் படத்திற்கே அதிக நல்ல பாடல்களை இளையராஜா கொடுத்துள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாராட்டு விழாவிற்கு ‘இளையராஜா 75’ என்று பெயரிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் மற்றும் நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆளுநர் புரோஹித் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரகுமான் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இளையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேச்சு
கமல் ஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை அனைத்து முன்னணி நடிகர்களும் பங்கேற்ற நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் மேடையில் இளையராஜா குறித்து பேசினார். அப்போது, “ரமண மகரிஷியை எனக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். ஒரு நாள் அவரை காணும்போது எனக்கு சாமி என்று அழைக்க தோன்றியது. அன்று முதல் நான் அவரை சாமி என்று அழைப்பேன். அதேபோல் அவரும் என்னை சாமி என்று தான் அழைப்பார்.
70, 80களில் பண்டிகை நாட்களில் 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ரீரெக்கார்டிங் செய்திருக்கிறார். அவர் ரீரெக்கார்டிங் செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளார்” என்றார்.
ஒரு புறம் பாராட்டிக் கொண்டிருக்கும்போதே சில உண்மையையும் சட்டென போட்டுடைத்தார். ராயல்ட்டி விவகாரத்தையும் நைசாக இழுத்துவிட்ட ரஜினி, “கலை சரஸ்வதி என்றால், பணம் லக்ஷ்மி. என்ன சாமி உங்களிடம் சரஸ்வதி போலவே லக்ஷ்மியும் நிறைய இருக்கிறது போல? என்று கேட்க, “அப்படியெல்லாம் இல்லை, சரஸ்வதி மட்டும் தான் இருக்கிறது” என பதிலளித்தார் இளையராஜா.
உடனே கவுண்ட்டர் கொடுத்த ரஜினி, “இல்லையே இப்போதெல்லாம் நிறைய பணம் வருது போல? அப்புறம் என்ன?” என்றார். அதற்கு இளையராஜா “ அது கூட எனது பாட்டின் மூலம் தானே வருகிறது” என்றார்.
இவ்வாறு இருவரின் உரையாடலும் அரங்கம் முழுவதும் கலகலப்பை ஏற்படுத்தியது.