மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் சமீபத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தின் செட்டில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், அடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சுவாரியார், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
கேரளாவில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, நெல்லை,மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்போது ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் பாண்டிச்சேரியில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த புகைப்படத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ள ஹெலிகாப்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த ஹெலிகாப்டர் படத்தில் ஆக்ஷன் காட்சியாக உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நஹாஸ் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்றில், வேட்டையனின் ஸ்டண்ட் நடன இயக்குனரான அன்பு-அறிவுவும் சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனருடன் போஸ் கொடுத்துள்ளனர்.
இதனிடையே படத்தில் உள்ள ஹெலிகாப்டர், ரஜினிகாந்த் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்ல பயன்படுத்தியதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. ஹெலிகாப்டருக்கும் வேட்டையனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக காணப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“