செப்டம்பரில் திரையரங்குகளில் வெளிவந்த 'தளபதி' விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வானவேடிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இந்தப் படத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் ரஜினிகாந்த் படங்களின் மாஸ் ஓபனிங் இந்தப் படத்திற்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் அகில இந்திய அளவில் ரூ.30 கோடி வசூல் செய்தது. வேட்டையன் படம் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. தமிழகத்தில் ரூ. 26 கோடியை ஈட்டியுள்ளது, அதைத் தொடர்ந்து தெலுங்கு வசூல் ரூ.3 கோடிக்கு சற்று அதிகமாக இருந்தது.
வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ள நிலையிலும், வடமாநிலங்களில் ஓ.டி.டி பிரச்சனை காரணமாக அதிக திரையரங்குகளில் வெளியாகததால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைவாக உள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு சாதனைகளை முறியடித்த ரஜினியின் முந்தைய படமான ஜெயிலருடன் ஒப்பிடும்போது வேட்டையனின் வசூல் மிகவும் குறைவாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.37 கோடி உட்பட ரூ.48 கோடி வசூல் சாதனை படைத்தது, இதன் மூலம் வேட்டையனின் அகில இந்திய வசூலை மிஞ்சியது.
அதேநேரம் விஜய் நடித்த கோட் படம் அகில இந்திய அளவில் ரூ.44 கோடி வசூலித்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் வசூல் ரூ.39 கோடியாகும். இதன் மூலம் கோட் பட வசூலை விட வேட்டையன் படம் குறைவாக வசூலித்துள்ளது. இருப்பினும், வார வேலை நாளில் பட வெளியான நிலையில், விடுமுறை நாட்களில் படம் வசூலைக் குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“