Rajini Kanth | Vijay: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் 'லால் சலாம்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த விழாவில் ரஜினி பேசுகையில், காக்கா- கழுகு கதை நான் விஜயைக் குறிப்பிட்ட மாதிரி சமூக ஊடகங்களில் எல்லாம் பேசிக்கொண்டுளர்கள், அது தனக்கு வருத்தமாக இருந்தது என்றும், 'விஜயே சொன்னது போல அவர் படத்துக்கு அவர்தான் போட்டி' என்றும் அவர் கூறியுள்ளார்.
விழாவில் ரஜினிகாந்த் நடிகர் விஜய் குறித்து பேசுகையில், "சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டார்கள். எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன்.
'தர்மத்தின் தலைவன்' படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, 'என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்' என்றார். அப்போது நான் விஜய்யிடம் 'உங்களால் முடியுமா?' என்று கேட்டேன், முடியும் என்றார்.
அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது.
எனக்கு போட்டி நான் தான் என விஜய்யே கூறியுள்ளார். என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே கூறியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள்." என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது முந்தைய படமான ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குட்டி கதையான ‘காக்கா-கழுகு’ கதை விஜயைக் குறிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி தற்போது பேசி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“