இவரைப் பார்க்காதீர்கள்… இவருடன் ஓடிக் களைத்தவர்களின் பட்டியலைப் பாருங்கள்!

Rajinikanth: இந்தி படத்தில் நம்பர் ஒன் நாயகர்களாக இருப்பவர்கள் ரஜினி புகைப்படத்தை பயன்படுத்தும் அளவிற்கு சென்றது ரஜினியின் புகழ்.

Rajinikanth Tamil News

நடிகர் ரஜினிகாந்தின் சினிமாப் பயணம் 45 ஆண்டுகளை கடந்திருக்கிறது. பிரமிக்கத் தக்க ஒரு சூப்பர் ஸ்டாராக அவர் பரிணாமம் பெற்ற விதத்தை இங்கு விவரிக்கிறார், விமர்சகர் திராவிட ஜீவா.

அந்த மனிதரின் ஆரம்ப கால ஆசை என்ன தெரியுமா? சிறந்த வில்லன் நடிகராக வரவேண்டும்; சொந்தமாக lambrada ஸ்கூட்டர், ஒரு சொந்த வீடு இவைதான்! முன்னணி நடிகராக உருவெடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் சொன்ன வார்த்தைகள் அவை! இன்று..?

சற்றேறக்குறைய அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகையும், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய திரை உலகையும், இரண்டு தசாப்தங்கள் (20 ஆண்டுகள்) இந்தி திரையுலகையும்- ஆசிய சினிமாவையும் ஆண்டு கொண்டிருக்கும் உலக சினிமாவில் தவிர்க்க முடியாத சக்கரவர்த்தி அவர்! சினிமாத் துறையின் ஒரே சூப்பர் ஸ்டார் அவர் என்பது விமர்சனங்களைக் கடந்த உண்மை. அதற்கான காரணங்களை சொல்கிறேன்…

ஏதோ ஓரிரு படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்து விட்டோம்; வியாக்கியானம் செய்தோம்; விளம்பரம் செய்தோம்; சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டோம்; நான் தான் நம்பர் ஒன் என்று மார்தட்டிக் கொண்டவரல்ல ரஜினிகாந்த். சிலரது படங்கள் இவரை விஞ்சியதாக ஊர்ஜிதம் செய்யாத செய்திகளும் பூடகச் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டாலும் சூப்பர்ஸ்டார் என்கின்ற எழுத்துதான் எங்கும் பேசுபொருள்; இன்றும் பேசுபொருள்!

‘அந்த மனிதரின் ஆரம்ப கால ஆசை என்ன தெரியுமா? சிறந்த வில்லன் நடிகராக வரவேண்டும்; சொந்தமாக lambrada ஸ்கூட்டர்’

ரஜினியை வீழ்த்தி விட்டோம், வென்று விட்டோம் என்கிற விவாதங்கள் அனல் பறந்தாலும், நிஜம் என்னவென்றால் ரஜினியின் இடம் ரஜினிக்கானது மட்டுமே. அன்றைய கமல்ஹாசன், மோகன், ராமராஜன், பாக்யராஜ் முதல் ராஜ்கிரன், விக்ரம், சூர்யா, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை; இவர் ரஜினியை வீழ்த்திவிட்டாரா? ரஜினியை வென்றுவிட்டாரா? என்கிற கேள்விகள் முப்பது வருடங்களை தாண்டியும் முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.
ஆனால் அது முடிவில்லா ஆச்சரியமாக தொடர்கிறது.

உலக திரை வரலாற்றில் எந்த ஆளுமையும் பத்து வருடங்கள், அதாவது ஒரு தசாப்தம் மக்களை ஆள முடியும் என்பதே வரலாறாக இருக்கிறது. அர்னால்டு, சில்வர்ஸ்டர் ஸ்டாலன், ஜாக்கிசான், ராஜ்கபூர், ராஜேஷ் கண்ணா முதல் எம்ஜிஆர், சிவாஜி, கமல் வரை உலக சினிமாவின் விதிகள் இதையே தெரிவிக்கின்றன. பத்து வருடங்கள் கூட முன்னணியில் இருக்க முடியுமே, தவிர முதலிடத்தில் இருக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.

இது மேற்கூறிய அனைத்து ஜாம்பவான்களுக்கும் பொருந்தும். இதில் சிலர் கூடுதலாக ஒரு ஐந்து ஆண்டுகள் தாக்குபிடிப்பது உண்டு. யாரும் முதலிடத்தில் தொடர்ந்து இருந்ததே இல்லை என்பது உலக அளவிலான எதார்த்த விதி. ஆனால் எந்த விதிகளும் இந்தக் கருப்பு காந்தத்தின் முன் எடுபடவில்லை.

எழுபதுகளின் இறுதியில் பைரவியில் தொடங்கி ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, தர்மயுத்தம், பிரியா, அன்னை ஒரு ஆலயம் என்கிற தொடர் வெற்றியின் மூலம் உலக சினிமாவின் தொடர் வெற்றி வசூல் நாயகனாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்தவர்; முரட்டுக்காளையில் மூக்கணாங்கயிறுக்கு கட்டுப்படாத அடக்கமுடியாத காளையாக தனிக்காட்டு ராஜாவாக தொடர்ந்தார்.

இவர் ரஜினியை வீழ்த்திவிட்டாரா? ரஜினியை வென்றுவிட்டாரா? என்கிற கேள்விகள் முப்பது வருடங்களை தாண்டியும் முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

1982 ஆம் ஆண்டு வந்த சகலகலா வல்லவனின் வெற்றியால் இவரின் சக போட்டியாளர் கமல்ஹாசன் சீறிப்பாய்ந்த காளையை தடுத்து நிறுத்தினார். அதற்குப் பின்பு தம்பிக்கு எந்த ஊரு, தங்கமகன் என்று மீண்டும் கிளம்பிய ரஜினிக்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு சிறிய தடையை போட்டது. ஆனாலும் கமல், பாக்யராஜ் இருவரும் தொடர் போட்டியாளராக ரஜினியை தொடர முடியவில்லை.

அன்று ஆரம்பித்த ஓட்டம் இன்றுவரை தங்குதடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது. இப்போதுவரை அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் ரஜினியின் வியாபாரத்தையும் வசூலையும் வென்றதாக இல்லை. இதுவே ரஜினியின் திரை ஆளுமையை, அரசாட்சியை பறைசாற்றுகிறது.

இவ்வளவு பெரிய வெற்றி எப்படி சாத்தியமானது? என்பது ஆய்வுக்கு உரியது. எப்படி நடந்தது இந்த அதிசயம்… அற்புதம்? கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம். சினிமாவிற்கு என்று ஒரு இலக்கணம் இருந்தது. கலரான தேகம், படிய வாரப்பட்ட சுருள்முடி, பளிச்சென்று சேவிங் செய்யப்பட்ட மேக்கப் முகம்… இதுவே இந்திய சினிமாவின் இலக்கணமாக இருந்தது. இதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல.

ஆரம்பத்தில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்த ரஜினி தியேட்டரில் அமர்ந்து ரசிகர்களுடன் படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் படம் பார்ப்பதைவிட ரசிகர்கள் எந்தெந்த காட்சிக்கு என்ன மாதிரியான வரவேற்பைத் தருகின்றார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தார். ஆரம்பத்தில் தன்னுடைய வேகத்தையும், வித்தியாசமான ஹேர் ஸ்டைல், லாங்குவேஜ் ஸ்டைல், மேனரிசம் போன்றவைகளையே அதிகம் ரசிக்கிறார்கள் என்ற ஆடியன்ஸ் பல்ஸை கவனித்தார்.

‘நான் வாழவைப்பேன்’ போன்ற படங்களில் நடிகர் திலகத்தையே மிரளவைத்த மைக்கேல்டிசோசா கதாபாத்திரங்கள்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு தன்னிடம் ஆடியன்ஸ் என்ன ரசிக்கின்றார்கள் என்பதை இயக்குனர்களிடம் தெரிவித்தார். ஆரம்ப கட்டத்தில் அவர் பெரிய கதாநாயகன் இல்லை என்பதால் அவரின் இந்த கருத்தை பல இயக்குனர்கள் நிராகரித்துள்ளனர். ஆனால் ரஜினி தன்னுடைய தனித்துவத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலுக்கட்டாயமாக பயன்படுத்தினார். அது ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ‘நான் வாழவைப்பேன்’ போன்ற படங்களில் நடிகர் திலகத்தையே மிரளவைத்த மைக்கேல்டிசோசா கதாபாத்திரங்கள்.

அந்தப் படத்தின் தயாரிப்பாளரான கேஆர்விஜயா சொன்னது… ‘நான் வாழவைப்பேன் என்று சொன்ன ரஜினி வாழ வைத்தார்’. அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் என்கிற வரிசையில் சிவாஜி மிகப்பெரிய இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஜாம்பவான்கள் இருக்கும்போதே தனக்கென ஒரு தனி பாணியை கையாண்டதால் தான் தனக்கென ஒரு தனியாக ஒரு ரசிகர் வட்டத்தை, பட்டாளத்தை, படையை பெற முடிந்தது இவரால்! அதானாலேயே அவரது படங்கள் மாபெரும் வசூல் சாதனை படைத்தன.

அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஸ்ரீதர் போன்றவர்களே முதலில் ரஜினியின் ஸ்டைல் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள். பின்பு தியேட்டர்களில் ரசிகர்களின் அளவுகடந்த ஆரவாரத்தை பார்த்தபின்பு இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் உருவானதை பிரமிப்புடன் பார்க்கத் தொடங்கினர். ரஜினி ஸ்டைல் என்கின்ற தமிழக இளைஞர்களுக்கான மந்திரம் உருவானது 70களின் இறுதியில்!

எம்ஜிஆர், சிவாஜி, கமல் என்கின்ற சீனியர் நடிகர்களின் நடிப்பு மேனரிசம் போன்றவற்றை மக்கள் வெகுவாக ரசித்தாலும் நடிப்பு என்பதை தாண்டி ஈர்ப்பு என்கிற வட்டத்திற்குள் விழியீர்ப்பு விசையாக ரசிகர்களின் விழியில் நுழைந்து மனதில் சிம்மாசனம் போட்டு மன்னனாக அமர்ந்தார் ரஜினி. தொடர்ந்து அதிகமாக ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் தில்லுமுல்லு போன்ற நகைச்சுவை படங்களிலும், தம்பிக்கு எந்த ஊரு போன்ற காமெடி கலந்த கமர்சியல் படங்களிலும் கொடி நாட்டினார்.

இதுபோன்ற படங்கள் பெண்கள் மத்தியில் ரஜினியை ஒரு சகோதரனாக, பிள்ளையாக அறிமுகம் செய்தன. ரஜினியின் அசைக்க முடியாத அடித்தளமாகவும் அவை மாறின. ஒரு கட்டத்தில் ரஜினியின் போஸ்டர் அல்லது பெயரை ஒரு படத்தில் பயன்படுத்தினாலே அந்தப்படத்துக்கு ஆடியன்ஸ் கூடுகிறது என்னும் அளவிற்கு அவரின் இமேஜ் உயர்ந்தது .
இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் rajini reference சீன்கள் வைக்கப்பட்டன. இது எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத ஒன்று. இதற்கு ஒரு சான்று, கடந்த 2011ம் ஆண்டு ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய போது, இந்தியத் திரை உலகின் அரசன் இனி சினிமாவில் நடிப்பாரா என்கிற கேள்வியை கேட்காத நபர்களே இல்லை.

ரஜினிகாந்தைப் பார்க்காதீர்கள். அவருடன் இணைந்து திரைத் துறையில் ஓடிக் களைத்துப் போனவர்களின் பட்டியலைப் பாருங்கள்.

அதன்பிறகு சற்று உடல் நலம் தேறியபோது இந்தி நடிகர் ஷாருக்கான் ரா-ஒன் என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதில் ரஜினியின் எந்திரன் படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுபடுத்தும் வகையில் எடுத்தார். அதற்கு ரஜினி அவர்களே குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பி தொடர்புகொண்டார்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்து மீண்டுவந்த ரஜினிக்கு சினிமா ஆர்வத்தை ஊட்டியது ஷாருக்கானின் வரவேற்பு. அந்த ஒரே ஒரு குரல் தான், ‘ஓகே, நான் வருகிறேன்’ என்று சொன்ன ரஜினி, ஒரே ஒரு வரியில் டப்பிங் குரல் கொடுத்திருந்தார். படம் வெளிவந்து நன்றாக ஓடியது.

படம் ஓடியபின்பு ஷாருக்கான் ஒரு பேட்டியில் சொன்னார், ‘நாங்க எல்லாம் படம் நடிக்கணும், எந்த நடிகராக இருந்தாலும்! ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு அது தேவையில்லை. ஒரே ஒரு குரல் போதும்’ என்றார். அதோடு மட்டும் நிறுத்தவில்லை. ‘இந்தப் படத்தில் ஒரே ஒரு முறை குரல் மட்டுமே கொடுத்தார். அவர் பெயரை போஸ்டரில் மட்டுமே பயன்படுத்தினேன். இதுவரை எனது படங்களின் வசூலை விட தென்னிந்தியாவிலும் ஓவர்சீஸிலும் ஒரே ஒரு குரலுக்காக முப்பது கோடி ரூபாய் கூடுதலாக வசூலித்தது எனது படங்களிலேயே தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக வசூல் படமாக இந்தப் படம்தான் இருந்தது’ என்று கூறினார் ஷாருக். அதற்காக ஒரு கோடி ரூபாயை ரஜினிக்கு தர விரும்புவதாக தெரிவித்ததாகவும், அதை ரஜினி மறுத்ததாகவும் தெரிவித்தார்.

எந்த ஹிந்தி படங்கள் தென்னிந்தியாவை ஆக்கிரமிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து இருந்ததோ, அதே இந்தி படத்தில் நம்பர் ஒன் நாயகர்களாக இருப்பவர்கள் ரஜினி புகைப்படத்தை பயன்படுத்தும் அளவிற்கு சென்றது ரஜினியின் புகழ். அதற்குப் பிறகு ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக ஆல் த ரஜினி ஃபேன்ஸ் என்று ரஜினி ரசிகர்களையும், ரஜினியை தலைவா என்றும் புகழ்ந்து பாடல் காட்சி அமைக்கப்பட்டது. இது ரஜினி சாருக்கான எனது அன்புப்பரிசு என்று சொன்னார் ஷாருக்கான்.

தென்னிந்திய மற்ற மாநில நடிகர்கள் கூட அந்தந்த மாநிலங்களில் தங்களை ரஜினி ரசிகர்களாக அடையாளப்படுத்திக் கொண்ட நிகழ்வும் நடந்தது. மகேஷ்பாபு, பிரபாஸ் உள்பட! இப்படி இந்திய சினிமாவை ஆளும் மன்னனாக உருவெடுத்த ரஜினியின் திரைசாதனைகள் நான்கு தசாப்தங்களை கடந்தும் தொடர்கிறது.

உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே சாத்தியப்படாத ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு படங்கள் வெற்றி, ஓரிரு வருடங்கள் அதை தக்க வைக்கலாம். பத்து வருடங்கள் என்பதே தொடர் வெற்றியாக யாருக்குமே சாத்தியமில்லை என்கிறபோது, 45 வருடங்கள் தொடர்வது வியப்பின் உச்சமே. வார்த்தைகளால் வர்ணித்து விட்டு கடந்துவிடலாம் வரலாற்று சாதனையை. ஆனால் அப்படிக் கடக்கமுடியாதது ரஜினியின் வெற்றிப்பயணம். ஆம், ரஜினியின் காலம் கடந்த வெற்றிகளாக எது இருப்பினும் கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மக்களின், ரசிகர்களின் மனதை அறிந்தவர் மட்டுமல்ல, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கலைஞனாக இருப்பதும்தான்.

சில, பல காரணங்களுக்காக ரஜினிகாந்த் என்கிற நடிகரை சூப்பர் ஸ்டாராக ஏற்க மனம் இல்லாத சிலர் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குப் பிடிக்காவிட்டால், ரஜினிகாந்தைப் பார்க்காதீர்கள். அவருடன் இணைந்து திரைத் துறையில் ஓடிக் களைத்துப் போனவர்களின் பட்டியலைப் பாருங்கள். 45 ஆண்டுகளாக அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார். ஆம், நீ எப்பவுமே ராஜா தான் திரை உலகில்!

-திராவிட ஜீவா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth tamil movies super star in cinema

Next Story
எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; எக்மோ கருவி உதவியுடன் சுவாசம்singer sp balasubrahmanyam, spb health condition, spb health continues to be critical, director bharathiraja calls for mass prayer, எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம், எஸ்பிபி-க்கு எக்மோ கருவி, வெண்டிலேட்டரில் எஸ்பிபி, mass pryer to speedy recover of singer spb, spb affected by covid-19, coronavirus, பாரதிராஜா கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு, எஸ்பிபி, எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express