அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தலைவர் 168 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மன்னவன் என்று பெயரிடப்பட்ட நிலையில், படக்குழுவினர் ‘அண்ணாத்த’ என்ற புதிய டைட்டிலை பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அண்ணாத்த என்ற பேச்சு வழக்கிலான டைட்டில் ரசிகர்களை எளிதில் ஈர்க்கும்படியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அறிவித்த பிறகு தொடந்து திரைப்படங்களை நடித்து வருகிறார். அண்மையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்துக்கு தலைவர் 168 என்று தற்காலிகமாக் பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அண்மையில் தலைவர் 168 படத்துக்கு மன்னவன் என்று பெயரிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மன்னவன் படத்துக்கு அண்ணாத்த என்ற பேச்சு வழக்கிலான எளிதில் ஈர்க்கக்கூடிய பெயரை வைக்க படக்குழுவினர் பரிசீலித்துவருதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லொக்கேஷன் பார்த்து வருகின்றனர். இது குறித்து தலைவர் 168 படக் குழுவினர் வட்டாரம் கூறுகையில், “தற்போது, நாங்கள் பிரேக்கில் இருக்கிறோம். பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். படப்பிடிப்பு மார்ச் 15 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த என்ற டைட்டில் எங்களுக்கு விருப்பமான இந்தப் படத்தின் டைட்டிலில் ஒன்று. இருப்பினும், இந்த டைட்டில் இல்லை. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. படத்தின் டைட்டில் தயாரிப்பாளருக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் மட்டுமே தெரியும்” என்று சஸ்பென்ஸ் வைக்கின்றனர்.
தலைவர் 168 படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அறிமுக பாடலை SPB ஆல் பாடலாம் என்றும், பாடல் வரிகள் கவிஞர் விவேகாவால் எழுதப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவர் காலா மற்றும் கபாலியில் ரஜினிகாந்திற்கு பாடவில்லை. ஆனால், பேட்ட படத்தில் மரண மாஸ் மற்றும் தர்பாரில் சும்மா கிழி பாடல்களைப் பாடினார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசை அமைத்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.