லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலையில் தங்கி இருந்த நடிகர் ரஜினிகாந்த் தனது போர்ஷனை முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் வழிபாடு செய்த அவருக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தரிசனம் செய்து சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
பொதுவாக மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதியில்லை.
இதனால் இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார், "கடவுள் முன்பு அனைவரும் சமம். யாராக இருந்தாலும், கருவறை முன்பு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. புகைப்படம் எடுத்தவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil