ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மனசிலாயோ’ என்ற பாடல் புரோமோவை வெளியிட்ட படக்குழுவினர், ஏ.ஐ தொழில் நுட்பத்தின் மூலம் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் மீண்டும் ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அந்த பாடலில் ஒரு பழம்பெரும் பாடகரின் குரலை மீண்டும் கொண்டு வருகிறேன் அது யார் என்று கண்டுபிடியுங்கள் என்று வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படமாக வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 10-ம் தேதி வேட்டையன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
வேட்டையன் படம் ரிலீசுக்கு முன்பாகவே, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி ரூ. 65 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.90 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மனசிலாயோ’ என்ற பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படக்குழு ‘மனசிலாயோ’பாடலின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மனசிலாயோவில் ஒரு பழம்பெரும் பாடகரின் குரலை மீண்டும் ஒலிக்கிறது, அது யார் என்று கண்டுபிடிகள் என்று பதிவிட்டுள்ளது. இந்த பாடலைக் கேட்ட ரசிகர்கள் பலர் எஸ்.பி.பி குரல் என பதிவிட்டு வருகின்றனர். சிலர், இது மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் என்று பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர்களின் குரலை புதிய பாடலுக்கு பயன்படுத்தி ஒலிக்கச் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ படத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருந்தார். அதே போல, கோட் படத்தில் வரும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் படத்தில் பயன்படுத்தப்பட்டது.
தற்போது,வேட்டையன் படத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அல்லது மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் பல பிரபலமான பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவனின் குரல் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் ஒலிக்கச் செய்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“