ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்றுள்ளார். ரஜினிகாந்த்துக்கு லதா ஆரத்தி எடுத்து வரவேற்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 3ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும். டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது. அதற்கு முன்னதாக, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டியுள்ளதால் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.
இதையடுத்து, டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ரஜினிகாந்த், ஐதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் ஐதராபாத் சென்றார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் டி இமான இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
View this post on Instagram
ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் ஒரு வாரத்துக்கு மேல் நடித்த நிலையில், படக்குழுவினரில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பரிசோதனையில் ரஜினிகாந்த்துக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு டிசம்பர் 25ம் தேதி திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. ரஜினிகாந்த் உடல்நலத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 27) மாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதோடு, ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளது என்றும் அவர் 1 வாரத்துக்கு முழுவதுமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக மருத்துவமனை நிர்வாக அறிக்கை வெளியிட்டது.
ரஜினிகாந்த் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலையே சென்னைக்கு வந்தார். ரஜினிகாந்த் விமான நிலையத்தில் இருந்து போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் வந்தார். காரில் அவருடன் அவரது மகள் உடன் வந்தார்.
வீட்டுக்கு வந்த ரஜினிகாந்த்துக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். ரஜினிக்காந்த்துக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ரஜினிகாந்த் உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த்துக்கு அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.