டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பியர் கிரில்ஸ் உடன் பங்கேற்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இவர் காட்டுக்கு சென்று கடுமையான சூழல்களில் சாகசங்கள் செய்து ஜீவிப்பதை படம்பிடித்து ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் இளைஞர்கள் மட்டுமில்லாமல் பலரும் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாக வரவேற்பு பெற்றுள்ளது.
பியர் கிரில்ஸின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அவர், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் கடுமையான சூழலில் உயிர் வாழ்வது எப்படி, காட்டாறு வெள்ளங்களில் தப்பிப்பது எப்படி, பாலவனங்களில் எப்படி பயணிப்பது என்பது போன்ற சாகசங்களை செய்துவருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் தான் மட்டுமல்லாமல் பிரபலங்களுடன் காட்டுக்கு பயணம் செய்வது என்பதும் நடைபெறுகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு, பியர் கிரில்ஸ், பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள் மேற்கொண்ட சாகச பயணம் பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் பியர் கிரில்ஸ் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பியர் கிரில்ஸின் சாகசப் பயணம் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து, ரஜினி மைசூருவில் இருந்து செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் சென்னை திரும்பினார். படப்பிடிப்பின் போது அவருக்கு காட்டில் முள் குத்தியதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் பியர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், பியர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மறக்க முடியாத அனுபவத்தை தந்த பியர் கிரில்ஸ் லவ் யூ என்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலும் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளது. ரஜினி பங்கேற்றுள்ள சிறப்பு எபிசோடிற்கான கவுண்ட்டவுன் இத்துடன் ஆரம்பிக்கிறது என்று ரஜினி பட வசனம் மூலம் டுவிட் செய்துள்ளது.
டிஸ்கவரி சேனல், தனது மற்றொரு டுவிட்டில், ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் நீர் பாதுகாப்பு குறித்து ஊக்கப்படுத்தி பேசியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே, சாகசக்காரர் பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியுடனான எங்கள் நிகழ்சி எபிசோட் ஒரு சிறிய தொலைக்காட்சி வரலாற்றை உருவாக்க உதவியது. 3.6 பில்லியன் பதிவுகள் இடப்பட்டுள்ளது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் @ ரஜினிகாந்த் என்னுடன் இணைகிறார். அவர் எங்கள் புதிய நிகழ்ச்சியான டிஸ்கவரி இன் #IntoTheWildWithBearGrylls-இல் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறார்.