2.0 Box Office Collection: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0, இந்திய சினிமாவிற்கு பவுண்டரியையும் தமிழ் சினிமாவிற்கு கண்ணுக்கு தெரியா எல்லைக்கோட்டையும் போட்டிருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இது பல ஆண்டுகளுக்கு சாதனையாக இருக்கும். சென்னை வசூலில் இதற்கு முன் கபாலி வசூலித்த 1.89 கோடி ஒரு மைல் கல். இப்போது 2.0 வசூல் 2.76 கோடி என்பது சாதனையாக மட்டுமல்ல, உச்சகட்ட வசூல் பிரளயமாக பார்க்கப்படுகிறது.
லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 2.0. உலகம் முழுவதும் இந்திய சினிமாவின் வசூல் எல்லைகளை எல்லாம் தாண்டி ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாளில் சென்னையில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்கள் உட்பட எந்தப் படங்கள் வந்தாலும் மிக அதிகமான திரையரங்குகளில் வந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடும். அதிலும் ரஜினி மட்டுமே விதிவிலக்கு. அதேபோல் 2..0 படமும் சாதாரண வேலைநாள் கிழமையான வியாழன் அன்று வெளியானது. முறையான முன்பதிவு தகவல்கள் தியேட்டர்களில் தரப்படாமலேயே முதல் நாள் வசூல் மிகபிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சென்னையில் இதற்கு முன்பு சாதாரண நாளில் வெளியான லிங்கா, கபாலி உள்ளிட்ட படங்கள் முறையே முதல் நாள் சுமார் 2300 காட்சிகளுக்குமேல் ஓடி வரலாறு படைத்தது. அதற்கு பின்பு தற்போது 2.0 படம் சென்னையில் 2400 காட்சிகளுக்குமேல் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படம் தியேட்டர் பிரச்சினையில் சிக்கி படம்வெளியாகும் முதல்நாளுக்கு முன்புவரை பல தியேட்டர்களில் படம் திரையிடப்படுமா? முன்பதிவு கொடுக்கப்படுமா ? என்ற குழப்பநிலை நீடித்தது. ரசிகர்களின் தொடர் படையெடுப்பால் தியேட்டர்களில், அதிலும் குறிப்பாக 3டி வெர்ஷன் வசதி ஏற்படுத்தப்பட்ட தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன என்றே சொல்லவேண்டும்.
2டி வெர்ஷன் பல இடங்களில் பெரிய வரவேற்பை பெறவில்லை எனினும் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் முதல் நாள் வசூல் 2.76 கோடி என கணக்கிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1033 திரையரங்குகளில் 42 கோடியை தாண்டியது. அதிகாரபூர்வ தகவல் வரும்போது, முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 48 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் இது பல ஆண்டுகளுக்கு சாதனையாக இருக்கும். சென்னை வசூலில் இதற்கு முன் கபாலி வசூலித்த 1.89 கோடி ஒரு மைல் கல். இப்போது 2.0 வசூல் 2.76 கோடி என்பது சாதனையாக மட்டுமல்ல, உச்சகட்ட வசூல் பிரளயமாக பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே தமிழ் வெர்ஷன் 148 கோடியும் தெலுங்கு வெர்ஷன் 51 கோடியும் ஹிந்தி வெர்ஷன் 134 கோடியும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிகமான தியேட்டர்களில் வெளியாகி, 60 சதவிகிதம் முன் பதிவிலேயே வசூலானது மைல் ஸ்டோன் ரெக்கார்டாகவே பார்க்கப்படுகிறது.
படம் மிகப் பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளது மட்டுமல்ல, படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவாக இருப்பதால் 2.0 படம் வசூலில் உலக சினிமாவின் சென்டர் பாய்ண்ட் எனப்படும் ஹாலிவுட் சினிமாவுக்கு போட்டியாக ஒரு இந்திய படம் பார்க்கப்படும் நிலையை உறுவாக்கியிருக்கிறது. இது ஒரு வசூல் பவுண்டரியை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வசூலிலும் இந்திய சினிமாவின் எல்லைக்கோடாக 2.0 பார்க்கப்படும்.
திராவிட ஜீவா