Rajinikanth's 2.0 Box Office Collection: கடந்த வியாழக்கிழமை வெளியான 2.0 பட வசூல் தொடர்பாக சமூக வலைதளங்களிலும், பல இணைய தளங்களிலும் பலவகையான கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பல்வேறு தரப்பிலிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும் கிடைத்த தகவல்களை தெளிவுபடுத்தி வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
உலகம் முழுவதும் 7450 தியேட்டர்களில் வெளியான படம் 2.0, ஹிந்தி, தெலுங்கிலும் நேரடியாக வெளியிடப்பட்டது. இந்திய சினிமாவின் டாப் நடிகர்களில் முக்கியமானவர்களான ரஜினியும், அக்ஷய்குமாரும் இணைந்தது, ஷங்கர் என்னும் பிரம்மாண்ட இயக்குநர் கைகோர்த்தது ஆகியவை எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தன.
தமிழ்நாட்டில் இந்தப் படம் 1033 தியேட்டர்களில் வெளியானது. கேரளாவில் 400 பிளஸ், ஆந்திராவில் 567 சென்டர், கர்நாடகாவில் 200, மும்பை உள்ளிட்ட வட இந்தியாவில் 2650 திரையரங்குகள், ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் 3000 தியேட்டர்கள் என்று இதுவரை இந்திய நடிகர்கள் படம் வெளியாகாத பலநாடுகளில் வெளியானது 2.0.
முதலில் இதன் தமிழ் வெர்ஷன் வசூலைப் பார்ப்போம். தமிழ்நாட்டில் இதற்கு முன் கபாலி 1000 தியேட்டர்களில் வெளியானது. 2.0 அதை விஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகரத்தில் மட்டும் முதல் நாள் சிறப்புக்காட்சிகளுடன் சேர்த்து 2400 காட்சி ஓடிய 2.0, முதல் நாள் சென்னை வசூலில் பண்டிகை நாட்களில் வெளியாகிய மற்ற கதாநாயகர்களின் படத்தைவிட மிக அதிகமாக 2.74 கோடி வசூலித்துள்ளது. 2400 காட்சிகளில் 80% ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் வேலை நாளாக இருந்தாலும் ரஜினி மேனியாவின் தாக்குதலால் தியேட்டர்களில் 60% வரை முன்பதிவிலேயே நிறைந்ததைக் காண முடிந்தது. மூன்றாம், 4-ம் நாட்கள் அதே அளவு தியேட்டர்களை மெயின்டெய்ன் செய்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
முதல் நாளைவிட மூன்றாம், நான்காம் நாள் வசூல் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் முதல் நாள் வசூல் 2.74 கோடி என்பதை நமது முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் செய்தியில் ஏற்கனவே தெரிவித்தோம். முதல் நான்கு நாள் வசூல் 12.9 கோடியை தொட்டு தகர்க்க முடியா சாதனையை 2.0 படைத்துள்ளது.
மதுரை மாநகரில் பொதுவாக ரிலீஸாகும் படங்கள் 8 ஸ்கிரீன் என்கிற எண்ணிக்கையையே தாண்டுவது கடினம். ஆனால் மதுரையில் 2.0 படம், 22 ஸ்க்ரீன்கள் 4 நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருப்பது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சென்னையின் முக்கிய தியேட்டரான சத்யம் திரையரங்கில் மற்ற படங்கள் 12 முதல் 14 காட்சிகள் திரையிடப்பட்டு, வார இறுதியில் 5 அல்லது 6 காட்சிகளாக குறைந்துவிடும். ஆனால் 2.0 காட்சிகள் அதிகரிக்கப்பட்டு 28 காட்சிகள் வரை எகிறியிருக்கிறது. மொத்தத்தில் 4 நாட்களில் 400 கோடியை உலக அளவில் 2.0 வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் இன்று (டிசம்பர் 3) அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஆனால் உள் நிலவரங்களை அறிந்த சினிமா புள்ளிகளோ, ‘சில பல சினிமா பிசினஸ் காரணங்களால் வசூல் நிலவரத்தில் 25 சதவிகிதம் குறைத்து சொல்லப்படுகிறது. நிஜ வசூல், சுமார் 500 கோடி’ என்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட படச் செலவை 4 நாட்களில் ஈடுகட்டிவிட்டது 2.0.
திராவிட ஜீவா