ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 2.0. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் எனும் பெருமை நீண்ட நாள் இதற்கு இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு வசூல் சாதனைப் படமாகவும் இருக்கும் என்பதும் உண்மை. இது இப்படத்தின் கலக்க்ஷன் நிலவரங்களை லைகா அதிகாரப்பூர்வமாக உடனுக்குடன் அறிவிப்பதிலிருந்து தெரிகின்றது.
இந்த சயின்ஸ் ஃபிக்க்ஷன் படத்திற்காக 20 வருடத்திற்கு முன்பே கமல், 10 வருடத்திற்கு முன்பே ஷாருக்கான் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இயக்குனர் ஷங்கர். 'இந்த பட்ஜெட்டை தாங்கக்கூடிய வலிமையுள்ள ஒரே நபராக ரஜினி மட்டுமே இருக்க முடியும்' என்பதை ஷங்கரிடம் தெரிவித்து, 'அவரை வைத்து படம் எடுங்கள்' என்று சொன்னது அமீர்கான்.
இதையடுத்து, ரஜினியுடன் பேசி எந்திரனுக்குப் பிறகு மீண்டும் இந்த கதையை லைகா நிறுவனத்திடம் சொன்னபோது அவர்கள் சம்மதித்ததால், ஷங்கரின் கனவுப்படம் எந்திரனுக்கு பிறகு இன்னொருமுறை நனவானது.
தற்போது வரை இந்திய அளவில் வேறு எந்தப் படத்திற்கும் '400 கோடி 500 கோடி வசூல்' என்று எந்த தயாரிப்பு நிறுவனமும் அறிவித்ததில்லை. முதன் முறையாக ஒரு தமிழ்ப்படம், தமிழ் கதாநாயகன், தமிழ் இயக்குநர் என இணைந்து உருவாக்கப்பட்ட படைப்பின் இந்த பிரம்மாண்ட வசூல் நிச்சயம் பெருமைக் கொள்ளத்தக்கதே.
-திராவிட ஜீவா