சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாத்த இந்த தீபாவளிக்கு ரெடியா?” என்று ட்வீட் செய்துள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் சுமார் 40 சதவீதம் படப்பிடிப்பு கோவிட்-19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தாமதமாகி வந்தது. கடந்த டிசம்பரில் தயாரிப்பு பணிகள் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. திரைப்படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த்துக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரிந்தது. இருப்பினும், மன அழுத்தம் அவரது இரத்த அழுத்த அளவில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சில நாட்கள் இருந்தார். பின்னர், அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு முழுமையான ஓய்வுக்காக சென்னை திரும்பினார். உடல்நிலை சரியானதும், ரஜினிகாந்த் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பினார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நாடு மற்றொரு பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன்பு, ரஜினிகாந்த் 35 நாட்கள் இடைவிடாமல் அண்ணாத்த படத்திற்காக செலவிட்டு தனது பகுதிகளை நடித்து முடித்தார்.
இயகுனர் சிறுத்தை சிவா எழுதி இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அண்மையில், ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கே அவருடைய சிகிச்சைகள் முடிந்த பின்னர் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில்தான், ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வருகிற திபாவளிக்கு (நவமபர் 4) திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள் சன்பிக்சர்ஸ் விரைவில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் சன் பிக்சர்ஸ் ரஜினி ரசிகர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி பரிசு கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“