காலாவுக்கு கர்நாடகாவில் தடை! ரஜினி அரசியல் பேசியதால் எதிர்ப்பு

ரஜினிகாந்த் அரசியலில் வர போவதாக அறிவித்த பின்னர், ராஜ தந்திரிமான பேச்சுக்களை கையாண்டு வருகிறார்.

காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கன்னட சினிமாவில் அரசியல் பிரச்சனைகளை மனதில் கொண்டு குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழக்கம் தற்போது மேலூங்கி உள்ளது. காவிரி பிரச்சினையில் சூப்பர் ஸ்டார் அண்மையில் தெரிவித்த கருத்து ஒன்று தற்போது அவரின், ’காலா’ படத்திற்கு தடையாக அமைந்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து கூறியது, அங்கு இருக்கும் கன்னட தயாரிப்பாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ’காலா’ படத்தை கர்நாடகாவில் ரீலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடவே, படத்தை வெளியிட்டால் எதிர் வினைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுக்குறித்து பேசியுள்ள கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ். ”கர்நாடகாவில் காலாவை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல,மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து கடுமையான போராட்டத்தை நடத்துவோம். அவர் கன்னட மக்களுக்கு எதிராக இருப்பதால் அவரின் படத்தை இங்கு திரையிட முடியாது” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் அரசியலில் குதிக்க இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஏப்ரல் மாதம் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதி போராட்டத்தில் “காவிரி மேலாண்மை வாரியம் கூடிய விரைவில் அமைக்கப்பட வேண்டும், அரசு அதை செய்யாவிட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ளக்கூடும்” என்றும் ரஜினி பேசியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடகாவில் காலாவை திரையிடுவதற்கு அச்சுறுத்தல் வந்துள்ளன. கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (கே.எஃப்.சி.சி) கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

கர்நாடக திரைப்பட தலைவர் சாய் ரவி கோவிந்த், சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நடிகர் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ கே.என்.என்.சி.சி., கன்னட-சார்பு குழுக்களிடமிருந்து 10 கடிதங்கள் இதுவரை வந்துள்ளன.அதில் காலா திரைப்படம் கர்நாடக மாநிலம் முழுவதும் வெளியிடப்படக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் அரசியலில் வர போவதாக அறிவித்த பின்னர், ராஜ தந்திரிமான பேச்சுக்களை கையாண்டு வருகிறார்” என்று விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இந்த எதிர்ப்பை சம்பாதிப்பது இது முதன்முறை அல்ல.கடந்த 2008 ஆம் ஆண்டில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டம் ஒன்றில் கர்நாடக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.”குண்டர்கள்” (கன்னடர்கள்) உதைக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

ரஜினிகாந்தின் அந்த பேச்சிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. படத்தின் வெளியீட்டைத் தடுக்க கன்னட படைகள் அச்சுறுத்தியதுடன், மன்னிப்பு கேட்டபின் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்பட்டது.அதேபோல் காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்தை எதிர்த்து, பாகுபலி2 திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்து நேற்று மாலையில் அந்த மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close