தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இன்று காலை உடல் நலக்குறைவால் மறைந்தார்.
அவருக்கு தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ஆம்! ரஜினி என்ற கலைஞனை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மகேந்திரனுக்கு பெரும்பங்கு உண்டு.
அதோடு இருவரின் நட்பும் வானளவு பரந்து விரிந்தது.
பள்ளிக்கரணையில் இருக்கும் மகேந்திரன் வீட்டில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி, “இயக்குநர் மகேந்திரன் சார் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர். எங்களுடைய நட்பு சினிமாவைத் தாண்டி மிக ஆழமானது. எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறான் என்பதை எனக்கே காட்டியவர் மகேந்திரன் சார் தான். புது நடிப்புப் பரிமாணத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவர். முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாலச்சந்தர், நான் உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதற்கு ரொம்பப் பெருமை படுகிறேன், என்றார். அதற்குக் காரணம் இயக்குநர் மகேந்திரன் சார் அவர்கள் தான்.
பேட்ட ஷூங்கில் ரொம்ப நாள் கழித்து நிறைய பேசினோம். இப்போது இருக்கும் சமூகம், சினிமா, அரசியல் ஆகியவற்றில் அவருக்கு அதிருப்தியும் கோபமும் இருந்தது. அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றால், சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் யாருக்காகவும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டார். தமிழ் சினிமாவில் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. இருந்தாலும் தமிழ் சினிமா இருக்கும் வரை, அவரது படைப்புகளும், புகழும் நிலைத்து நிற்கும்” என்றார்.