/indian-express-tamil/media/media_files/2025/08/02/coolie-audio-launch-live-updates-2025-08-02-19-37-24.jpg)
ரஜினி - லோகேஷ் கூட்டணியின் 'மாஸ்' சுனாமி: ரசிகர்களை மிரள வைக்கும் 'கூலி'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான பர்ஸ்டே பர்ஸ்ட்ஷோ ரசிகர்கள் விமர்சனங்களில், இத்திரைப்படம் "ஆரம்பம் முதல் இறுதி வரை மாஸ் சுனாமி" என்று கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள், ரஜினிகாந்தின் நடிப்பு, அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை மற்றும் விசில் பறக்கும் காட்சிகளைப் பாராட்டி வருகின்றனர்.
கூலி படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் 'தாஹா' என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். இவர்களுடன் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். லோகேஷ் கனகராஜின் தனித்துவமான ஸ்டைலில் உருவாகியுள்ள படம், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளையும், ரசிகர்களை கவரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் உள்ளடக்கி, ரஜினிகாந்தின் 'மாஸ்' காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இந்நாளில் 'வார் 2' திரைப்படம் வெளியானாலும், 'கூலி' பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வார இறுதி விடுமுறைக்கு மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் முன்பதிவு மூலம் வசூலித்துள்ளது. முதல் நாளில் மட்டும் 12 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. வர்த்தக ஆய்வாளர்களின் கணிப்புப்படி, முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும், சுதந்திர தின விடுமுறை காரணமாக உலகளவில் ரூ.200 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், “கூலி பான்-இந்தியா திரைப்படம். இதில் ஒவ்வொரு தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாடு முழுவதும் பிரபலமானவர், அமீர்கான் வட இந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். லோகேஷ்-அனிருத் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 5 பெரிய நட்சத்திரங்கள், 5 மடங்கு ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுப்பார்கள்," என்று தெரிவித்தார்.
விமர்சகர்களின் அதிகாரப்பூர்வ விமர்சனங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தாங்களாக உருவாக்கிய வீடியோக்கள், மீம்கள் மற்றும் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்க்கும் அழைப்புகளால் நிரம்பி வழிகிறது. ஒரு ரசிகர், "ஆரம்பம் முதல் இறுதி வரை மாஸ் சுனாமி! ரஜினிகாந்த் இதுவரை காணாத மாஸ், அனிருத்தின் பின்னணி இசை” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "இயக்குநர் லோகி இடைவேளைக்கு முந்தைய 20 நிமிடங்களில் மற்றும் 2-ம் பாதி முழுவதும் படுபயங்கரமான 'பீஸ்ட் மோடில்' இருந்தார்" என்று எழுதி உள்ளார்.
பண்டிகைக் காலம் மற்றும் தென்னிந்தியா - வட இந்தியா ரசிகர்களின் பெரிய வரவேற்பு காரணமாக, 'கூலி' ரஜினிகாந்தின் சமீபத்திய படங்களில் மிகப் பெரிய ஓபனிங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் களத்தில் 'கூலி' திரைப்படம் பல சாதனைகளைப் படைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.