பொங்கலுக்கு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம், விண்டேஜ் ரஜினியை பல காலத்திற்கு பிறகு திரையில் கண் முன் கொண்டுவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஒவ்வொரு பிரேமிலும் ரஜினிக்கான மாஸ் காட்சிகளை பிரமாதப்படுத்தி இருந்தார்.
திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், ரஜினியிசம் அதனை முற்றிலும் மறக்கடித்து ரசிகர்களை ஏக கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தது.
'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' , 'இந்த ஆட்டம் போதுமா குழந்த' , 'ஸ்டைலா இருக்கேனா... நேச்சுரலி' போன்ற வசனங்கள் மிகவும் ரசிக்க வைத்தது. தவிர, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரா ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.
படம் ரிலீசான போது தான் அஜித்தின் விஸ்வாசத்திற்கும், பேட்ட படத்திற்கும் போட்டி இருந்தது என்றால், படம் ரிலீசான இத்தனை நாளைக்குப் பிறகும், சமூக தளங்களில் இவ்விரு படங்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.
பேட்ட படக்குழு படக் காட்சிகள் தொடர்பாக ஏதாவது ஒரு வீடியோ வெளியிட்டால், விஸ்வாசம் படக்குழு உடனே ஒரு வீடியோ ரிலீஸ் செய்யும். பேட்ட படக்குழு ஏதேனும் பாடல் வீடியோவை ரிலீஸ் செய்தால், விஸ்வாசம் டீமும் பாடல் வீடியோவை வெளியிடும்.
பொதுவாக, பெரிய படம் வெளியாகி, சில வாரங்கள் கழித்து இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவது சகஜம் தான். ஆனால், இங்கே, இவ்விரு படக்குழுவும் சில மணி நேர வித்தியாசத்தில் வீடியோக்களை வெளியிட்டு போட்டிப் போட்டு வருகின்றன.
இந்த நிலையில், பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் டப்பிங் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த வசனத்தை, திரையில் நாம் பிரமிப்பாக பார்த்திருப்போம். ஆனால், ரஜினி அதனை இவ்வளவு கூலாக டப்பிங் ரூமில் உட்கார்ந்து பேசியிருப்பதை பார்க்கும் போது, சினிமா ஒரு மாயாஜாலம் என்பது மீண்டும் நிரூபணமாகிறது.
மேலும், பேட்ட படத்தின் முழு பிஜிஎம் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.