இயக்குனர் ராம் கோபால் வர்மா சசிகலா என்ற பெயரில் சினிமா இயக்கி வருவதாகவும் அந்த திரைப்படம் தமிழக தேர்தலுக்கு முன்பு வெளியாகும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்றால் அது இயக்குனர் ராம் கோபால் வர்மாதான். அவர் எப்போதும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவார். அல்லது அவர் அறிப்பவைகள் அதிரடியாக இருக்கும்.
அந்த வகையில், தற்போது இயக்குனர் ராம் கோபால் வர்மா, “சசிகலா என்ற திரைப்படத்தை உருவாக்கிவருகிறேன்... இது எஸ் என்ற ஒரு பெண் மற்றும் இ என்ற ஒரு ஆண் ஒரு தலைவருக்கு என்ன செய்தார் என்பது பற்றியது... இந்த தலைவரின் வாழ்க்கை வரலாறு தமிழக தேர்தலுக்கு முன்பு அதே நாளில் இந்த திரைப்படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய நெருங்கிய தோழி சசிகலா, 2017ம் ஆண்டு சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ் அதிருப்தி தெரிவித்து கிளர்ச்சி செய்தார். அதே நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதிச் செய்யப்பட்டது. அதனால், அவருடைய ஆதரவாளராக இருந்த பழனிசாமி முதல்வரானார். ஆனால், விரைவில், சசிகலா, அவருடைய குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் விடுதலையாகி வெளியே வந்தால் அவர் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுகவில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்த சூழலில்தான், இயக்குனர் ராம் கோபால் வர்மா சசிகலா பெயரில் திரைப்படம் உருவாக்கி வருவதாகவும் அந்த திரைப்படம் தமிழக தேர்தலுக்கு முன்னர் வெளியாகும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்துஇயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சசிகலா என்ற பெயரில் திரைப்படம் உருவாக்கி வருகிறேன்... அது எஸ் என்ற ஒரு பெண்ணும் இ என்ற ஒரு ஆணும் ஒரு தலைவருக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றியது. இந்த திரைப்படம் தமிழ்நாடு தேர்தலுக்கு முன்னதாக அதே நாளில் தலைவரின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாகும். நீங்கள் மிக நெருக்கமாக இருக்கும்போது கொல்வது மிக எளிதாதானது தமிழ் பழமொழி கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் கௌதம வாசுதேவ மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், குயீன் என்ற தொடர் வெளியாகி உள்ளது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி என்ற பெயரில் ஒரு திரைப்படமும் உருவாகியுள்ளது. இதனைத் டொடர்ந்து, இப்போது இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சசிகலா திரைப்படம் உருவாகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”