Actor Kamal Haasan in the hospital | Kamal Haasan Health : நடிகர் கமல்ஹாசன் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கேற்பாரா அல்லது அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், நடிப்பு அரசியல் சின்னத்திரை என பிஸியாக பயணித்து வருகிறார். 4 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் வெளியாக இவரின் விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலில் பெரிய சாதனை நிகழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் என பிஸியாக நடித்து வரும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6-வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு நடிகர் கமல்ஹாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான பரிசோதனைதான் என்று தகவல் வெளியான நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
சிகிச்சைக்கு பின் நேற்று வீடு திரும்பிய கமல்ஹாசன், தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில், வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் தயாராக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதேபோல் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் ஓய்வெடுத்து வரும நிலையில், அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர முடியுமா? அவர் வரவில்லை என்றால் நடிகை ரம்யா கிருஷ்ணன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் சிம்புவும் இடம் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு பிக்பாஸ் 5-வது சீசன் முடிந்த உடன் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வந்த கமல்ஹாசன் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரவில்லை என்றால் சிம்பு வரவும் வாய்ப்பு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil