Advertisment

ரங்கூன் விமர்சனம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரங்கூன் விமர்சனம்!

பர்மாவிலிருந்து வந்த குடும்பம் ஒன்று வட சென்னையில் குடியேறுகிறது. குடும்பத் தலைவர் விபத்தில் இறந்துவிட, குடும்பம் அனாதையாகிறது. சிறுவனாகச் செனைக்கு வரும் வெங்கட்டுக்கும் (கவுதம் கார்த்திக்) அதே பகுதியில் வசிக்கும் குமரனுக்கும் இடையில் நெருங்கிய நட்பு உருவாகிறது. பொறுப்பில்லாமல் வளரும் வெங்கட்டுக்கு உள்ளூர் பணக்காரர் குணசீலனின் (சித்திக்) நகைக் கடையில் வேலை கிடைக்கிறது. ஒரு தாக்குதலிலிருந்து அவரது உயிரை வெங்கட் காப்பாற்ற, அவர் வெங்கட்டுக்கு தாராளமாக உதவுகிறார். நண்பர்களின் வாழ்க்கை வளமாகிறது.

Advertisment

குணா கேட்டுக்கொண்டதன் பேரில் தங்கக் கடத்தலில் ஈடுபடும் நண்பர்கள் அதில் வெகு தூரம் ஆழமாகச் செல்கிறார்கள். பெரிதாக ஒரு கடத்தல் வேலையில் இறங்கும்போது ஏமாற்றப்பட்டு, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து வெளிவருவதற்கான முயற்சிகள் மேலும் சிக்கலில் தள்ளுகின்றன. சிக்கலுக்குக் காரணமும் விளைவுகளும் என்ன என்ற கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறது திரைக்கதை.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்கிறார். வட சென்னையின் வாழ்க்கைச் சூழலை நன்கு சித்தரித்துள்ள அவர், தங்கக் கடத்தல் நடைபெறும் விதம், புலனாய்வு ஆகியவற்றுக்கான பின்னணித் தகவல்களைத் திரட்டி, நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். நட்பு, நல்லதுக்கும் கெட்டதுக்குமான ஊடாட்டம், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான துடிப்பு, துரோகம், தவிப்பு ஆகிய உணர்வுகளை வலுவாகத் திரையில் காட்டியிருக்கிறார். பாத்திரங்கள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன.

கடலோரப் பகுதியில் நடக்கும் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய சித்தரிப்பு நன்றாக உள்ளது. சிக்கலிலிருந்து விடுபடுவதற்காகக் கடத்தலில் ஈடுபடும் திருப்பம் நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படம் வேகமாகச் செல்கிறது. திருப்பங்கள் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் உள்ளன. என்றாலும் வெங்கட்டின் வாழ்க்கையில் ஏற்படும் வளர்ச்சி சில சமயம் மாயாஜாலம்போல உள்ளது. சதித் திட்டம் அம்பலமாகும் விதம் ஏமாற்றம் அளிக்கிறது. நீளமான கிளைமாக்ஸ் பொறுமையைச் சோதிக்கிறது.

கவுதம் கார்த்திக் பாத்திரத்தின் தன்மையை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார். தோற்றம், பேச்சு, உடல் மொழி என எல்லாவற்றிலும் வட சென்னைப் பையனாகவே ஆகிவிட்டார். சண்டைக் காட்சிகளில் வேகம், காதல் காட்சிகளில் நெகிழ்ச்சி, துயரமான காட்சிகளில் தழுதழுப்பு ஆகியவற்றை அழகாக வெளிப்படுத்துகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நாயகி சானா மக்பலுக்கு அதிக வாய்ப்பு இல்லை. அழகாக இருக்கிறார். கதையை நகர்த்திச் செல்லக் கொஞ்சம் உதவுகிறார். தந்திர புத்தி கொண்ட தொழிலதிபராக வரும் சித்திக்கின் அனுபவம் அந்தப் பாத்திரத்தை மிளிரச் செய்கிறது.

ஒளிப்பதிவாளர் அனிஸ் தருண்குமார் வட சென்னையின் யதார்த்தத்தை உணர்த்தும் விதத்தில் படமாக்கியிருக்கிறார். ரங்கூனை அழகாகக் காட்டியிருக்கிறார்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தோடு ஒன்றிப்போகிறது. விக்ரமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. அன்பறிவு அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் நன்கு எடுக்கப்பட்டுள்ளன.

குற்றவியலைப் பின்னணியாகக் கொண்ட படத்தில் பொதுவாக யதார்த்தம் இருக்காது. இந்தப் படம் அதற்கு விதிவிலக்கு. யதார்த்தமான காட்சிகளும் குற்றவியல் சார்ந்த விறுவிறுப்பான காட்சிகளும் சேர்ந்த கலவையாகப் படம் உள்ளது. மக்களையும் வாழ்க்கையையும் சித்தரிக்கும் விதத்தில் முதிர்ச்சி தெரிகிறது. விசுவாசத்துக்காகப் பல குற்றங்களைச் செய்யும் நாயகனுக்குத் தான் நல்லவனா, கெட்டவனா என்னும் ஐயம் அடிக்கடி வருகிறது. அதற்கு அவன் கண்டடையும் பதில் யதார்த்தத்துக்கு நெருக்கமாக உள்ளது.

நம்ப முடியாத சில திருப்பங்கள், இறுதிக் காட்சிகளில் உள்ள பலவீனம் ஆகிய குறைகளை விலக்கிவிட்டால் ரங்கூன் இயக்குநருக்கும் அவரது அணியினருக்கும் தயங்காமல் பூங்கொத்து கொடுக்கலாம்.

மதிப்பு: 3.5

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment