'நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர், 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவையும் தொட்டதில் இருந்து 'பான் இந்தியா ஸ்டார்' ஆக மாறி போயிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து 'தி கேர்ள்பிரண்ட்' என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் 'கிரிக்பார்ட்டி' என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமாகி உள்ளார். தற்போது தெலுங்கில் 'கேர்ள் பிரண்ட்' மற்றும் இந்தியில் 'தாமா' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், தனது மனதில் பூட்டிவைத்துள்ள விஷயம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்துள்ளார். அதாவது, தனது தங்கையை கடந்த 8 வருடமாக சந்திக்கவே முடியவில்லை என்றும், அதற்காக தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கை பெயர் ஸீமன் மந்தனா. ராஷ்மிகாவுக்கும், அவருடைய தங்கைக்கு இடையே 16 வயது வித்தியாசம் இருக்கும். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வவ்போது பகிர்வதுண்டு. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகும்.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கை குறித்து பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றி அவர் கூறும்போது, ''எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு 13 வயது. என்னைவிட 16 வயது குறைந்தவள். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும். அவளது குறும்புத்தனத்தை மிகவும் ரசிப்பேன். தற்போது படங்களில் பிசியாக இருப்பதால், என்னால் அவளை பார்த்து ஆசையாக பேசக்கூட முடியவில்லை.
என்னுடைய விடுமுறை நாட்களுக்காக நான் இப்போது அழுகிறேன். 8 வருடங்களாக அவளை என்னால் பார்க்கவே முடியவில்லை. ஓய்வு எடுத்துக்கொண்டு அவளை பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் ஒப்புக்கொண்ட பணிகள் முன்வந்து நிற்பதால் எதற்கும் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.