டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா-வை தவறாக சித்தரிக்கப்பட்ட அந்த் வீடியோவில் உண்மையில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண். இவருடைய வீடியோவை ராஷ்மிகா மந்தனா போல டீப் பேக் முறையில் எடிட் செய்து சமுக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் மற்றும் டீப் ஃபேக் வீடியோ மூலம் பிரபலங்களைத் தவறாகச் சித்தரிப்பவர்களையும் இது போன்ற தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை வேண்டும் என பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் முதல் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்தான், தன்னை தவறாக சித்தரித்து பகிரப்பட்டு வரும் டீப் ஃபேக் வீடியோ பற்றி நடிகை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார். அதில், “இணையத்தில் பரவி வரும் என்னைப் பற்றிய இந்த டீப்ஃபேக் வீடியோ என்னை கடுமையாக பாதித்துள்ளது. இதுபோன்று தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது என்னைப் போல பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் இதுபோன்ற சமயத்தில் என்னைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர், திரைத்துறையினருக்கு நன்றி. இதுவே நான் கல்லூரி, பள்ளியில் படிக்கும்போது நடந்திருந்தால் எப்படி இதை சமாளித்திருப்பேன் எனத் தெரியவில்லை” என்று கூறி உரிய நடவடிக்கை எடுக்க சைபர் போலீஸை டேக் செய்துள்ளார்.
ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் டீப் ஃபேக் வீடியோ எடிட்டிங் தொழில்நுட்பம் குறித்தான ஆபத்துகளைக் குறித்து, இணையத்தில் எழுந்திருக்கும் விவாதங்களில் மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரும் பங்கேற்று அரசின் ஆட்சேபத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது போல, போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழான நடவடிக்கைகள் சிலவற்றையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வு அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“