வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பிரபல நடிகர்கள் குற்றம்சாட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த திடீர் திருப்பத்தை தீவிர நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் நடிகர் ரவி கிஷன்.
சினிமாவில் நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக இன்றைய இளம் நடிகைகள் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்துள்ளனர். ராதிகா ஆப்தே, கங்கனா ரனவத், ரீமா கல்லிங்கல், பார்வதி என பல நடிகைகள் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வருகின்றனர். மலையாளத்தில் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்காக தனி அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். வரலட்சுமியின் சேவ்சக்தி தொடங்குவதற்கு நடிகைகள் மீதான பாலியல் வன்முறையும் முக்கிய காரணம்.
பாலியல் குற்றச்சாட்டுகளை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மேலும் கடுமையாக முன்வைத்தார். ஸ்ரீரெட்டியின் அரைநிர்வாணப் போராட்டம், குற்றச்சாட்டுகளை அவர் வைத்தவிதம் ஆகியவை பிற நடிகைகள், நடிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவைப் பெற்றுத்தரவில்லை. எனினும் ஸ்ரீரெட்டி அடங்குவதாக இல்லை. நானி மீது புதிதாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இப்படியொரு சூழலில்தான் ஸ்கெட்ச் படத்தில் நடித்த ரவி கிஷன், வாய்ப்புக்காக நடிகைகள் நடிகர்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வாய்ப்புக்காக நடிகைகளை மட்டுமில்லை நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. இது காலங்காலமாக நடப்பதுதான் என்று கூறியிருப்பவர், படுக்கைக்குச் சென்று வாய்ப்பு பெற்றால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. உங்களை விற்றுதான் இந்த இடத்துக்கு வந்தீர்கள் என்ற நினைப்பே உங்களை சித்திரவதை செய்யும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
ravi kishan
ரவி கிஷன் இந்தி, போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி தெலுங்கு சினிமாவிலும் இவரைப் பார்க்க முடியும். சமீபத்தில் தமிழில் வெளியான ஸ்கெட்ச் படத்தில் நடித்திருந்தார். நடிகைகள் வாய்ப்புக்காக நடிகர்களை துன்புறுத்துகிறார்கள், படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற இவரது குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்தி நடிகர் ரன்வீர் சிங் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரது ஆரம்பகாலத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். இதனை பிரபல நடிகைகள் மட்டும் செய்வதில்லை. தயாரிப்புதுறையில் இருக்கும் பெரிய இடத்து பெண்களும் செய்வதாக ரன்வீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் அனுபவம் வேறு மாதிரியானது. அவரது ஆரம்பகாலத்தில் தயாரிப்பாளர் ஒருவர் அவரை படுக்கைக்கு அழைத்துள்ளார். அவர் பெண் அல்ல ஆண். ஓரினச்சேர்க்கைக்காகவும் நடிகர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது ஆயுஷ்மான் குரானாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகே அதிகம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
ஒப்பீட்டளவில் நடிகர்களைவிட நடிகைகளே அதிகம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ரவி கிஷன் போன்றோரின் குற்றச்சாட்டுகள், நடிகைகள் மட்டுமா நடிகர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகைகளின் பிரச்சனையை அலட்சியமாக அணுக வாய்ப்பாகிவிடும். நடிகர்கள் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.