/indian-express-tamil/media/media_files/2025/06/02/djdjYkFNYmemnPuKQRxV.jpg)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இசையின் மீது எப்போதுமே தனி பிரியம் இருக்கிறது. முந்தைய தலைமுறை இசைக் கலைஞர்களை கொண்டாடுவதில் தொடங்கி இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு வரவேற்பு அளிப்பது வரை ஒரு அடி முன்னணியில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சின்மயி பாடிய 'முத்த மழை' என்ற பாடல் பலருக்கும் பிடித்தமானதாக மாறி இருக்கிறது. குறிப்பாக, இந்தப் பாடலை லூப் மோடில் கேட்பதாக நிறைய பேர் கூறுகின்றனர். தனது வசீகரிக்கும் குரலால் பலரையும் சின்மயி கவர்ந்து இருக்கிறார் என்றே கூறலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கண்ணத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சின்மயி. அதன் பின்னர், 'ஆருயிரே மன்னிப்பாயா', 'சர சர சாரக்காத்து', 'என்னோடு நீ இருந்தால்' போன்ற பல்வேறு பாடல்கள் மூலம் நம்மை வியப்பில் ஆழ்த்தினார். பாடல் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் பணியிலும் சின்மயி ஈடுபட்டார்.
ஆனால், இப்படி ஒரு குரலுக்கு தமிழ் சினிமாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சிலர் தற்போது மறந்திருப்பார்கள். அந்த தடைக்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் #Metoo இயக்கத்தின் பக்கங்களை கடந்த காலத்திற்கு சென்று நாம் புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக, தடை மட்டுமின்றி பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு சின்மயி ஆளாகி இருக்கிறார்.
உலகம் எங்கும் இருக்கும் பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விஷயங்களை தைரியமாக பொதுவெளியில் கூறுவதற்காக #Metoo இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு ஆண்கள், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அந்த சூழலில் கவிஞர் வைரமுத்து மீது, ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகளை சின்மயி சுமத்தினார். இதில் சின்மயிக்கு ஆதரவு குரல்கள் கொடுக்கப்பட்டாலும், பலரும் அவரை கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கினர். குறிப்பாக, இத்தனை ஆண்டுகள் பொறுத்துக் கொண்டு, இப்போது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான காரணம் என்னவென்று பலரும் சின்மயியை குறிவைத்து கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, டப்பிங் சங்கத்திற்கு சந்தா செலுத்தவில்லை என்று கூறி, தொலைக்காட்சி மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கி அதன் தலைவர் ராதாரவி உத்தரவிட்டார். இதன் விளைவாக, தமிழில் சின்மயிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் கணிசமாக குறைந்தன. எனினும், சில படங்களில் அவரது பாடல்கள் இடம்பெற்றன. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் சின்மயி, திரிஷாவிற்காக பின்னணி குரல் கொடுத்திருந்தார்.
இப்படி ஒரு சூழலில் தான் 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'முத்த மழை' பாடலை சின்மயி பாடியது ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக, யூடியூபில் சுமார் 4 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் இடையேயும் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் சின்மயிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதன்படி, அவருக்கான தடை நீக்கப்பட்டால் இன்னும் பல பாடல்கள் மற்றும் டப்பிங்கில் சின்மயி குரலை கேட்கலாம் என்ற ஆர்வம் பலரிடம் நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.