தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகை சரோஜாதேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். சரோஜாதேவி, தனது அரை நூற்றாண்டுக்கும் மேலான நடிப்பு வாழ்க்கையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
'அபினய சரஸ்வதி' என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர், தனது வசீகரமான நடிப்பு, அழகு மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஆனால் அவருடைய சாதனை மற்றும் மாபெரும் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் பற்றி நம்மில் யாருக்கும் தெரியாது.
நிறைய திரைப்படங்கள், விருதுகள், ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு என இன்றளவும் ரசிகர்களிடையே பரவலான அன்பை பெற்ற சரோஜாதேவி தனது வெற்றிக்கான காரணத்தை ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சரோஜாதேவி தனது திரையுலக வெற்றிக்கான ஒரு சுவாரஸ்யமான பின்னணிக் கதையை பகிர்ந்துள்ளார். அவர் தனது முதல் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஒரு புகைப்படத்தில் அவர் கண்ணில் இருக்கும் மச்சம் புகைப்படத்தில் விழுந்துவிட்டது.
Advertisment
Advertisements
இந்நிலையில் படப்பிடிப்பின் போது, ஒரு உதவி இயக்குனர் அவரிடம் வந்து, அவரது கண்ணில் உள்ள மச்சத்தை அகற்ற கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜாதேவி, உடனே தன் தாயிடம் ஓடிப்போய், "ஐயோ என் கண்ணு ஆபரேஷன் பண்ண போறாங்க. எங்களுக்கு இந்த படம் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். நம்ம போயிடலாம் வா," என்று கூறி அழுதாராம்.
அவரது தாய், இயக்குனரான கூரா சீதாராம் சாஸ்திரியிடம் சென்று விஷயத்தைக் கூற, அவர் சிரிக்க ஆரம்பித்துவிட்டாராம். "இல்லம்மா உன்ன சும்மா கலாட்டா பண்றதுக்காக சொல்லி இருக்காங்க. உன் கண்ணுல மச்ச இருக்கு பாரு. அது பெரிய அதிருஷ்ட மச்ச. நீ பெரிய ஸ்டாரா வருவ. கவலைப்படாதே," என்று சாஸ்திரி அவரிடம் கூறினாராம்.
அப்போது அதை நம்பாத சரோஜாதேவி, அந்த ஒரு படம் முடிந்தால் போதும், ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணியிருந்தாராம். ஆனால், அதற்குப் பிறகு அவர் நடித்த 'மகாகவி காளிதாசன்' திரைப்படம் பெரும் வெற்றியடைந்து, தேசிய விருதையும் வென்றது. சரோஜாதேவியின் கண்ணில் இருந்த மச்சம் அவருக்கு உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததாக சிரிப்புடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சரோஜாதேவி தனது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அபார திறமையின் மூலமே திரையுலகில் இந்த உச்சத்தை அடைந்தார். இருப்பினும், அவரது கண்ணில் இருந்த அந்த "மச்சம்" அவருக்கு ஒரு தனித்துவமான அடையாளம் மற்றும் அழகை சேர்த்தது.