மலையாள திரையுலகில் பிரபல நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறை சென்ற நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் சேர்க்கப்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் அஜித், மாதவன், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்திருந்த மலையாள முன்னணி நடிகை, கடந்த ஆண்டு ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அடுத்தக்கட்ட பரபரப்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக நடிகர் திலீப் கூலிப்படையினர் மூலம் இந்த கோர சம்பவத்தை நிகழ்த்தியதாக கேரள காவல் துறையினர் நடிகர் திலீப்பை கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த நடிகர் திலீப் இந்த சம்பவத்திற்கு தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார். சிறையில் இருந்த திலீப்பிற்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.
சிறை சென்ற காரணத்தினால் மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அம்மாவில் நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது மலையாள திரையுலகில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் திலீப்பின் வருகையை எதிர்த்து பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் நடிகை ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் ஆகியோர் அம்மாவில் இருந்து அதிரடியாக விலகினர். இந்த சம்பவம் குறித்து மலையாள திரையுலகத்தில் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் டபிள்யூ.சி.சி' அமைப்பிலுள்ள மூத்த நடிகையான ரேவதி, நடிகர் திலீப்பின் வருகையை எதிர்த்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி..
”நடிகர் திலீப் மீண்டும் ’அம்மா’வில் இணைந்தது எதிர்பார்க்காத ஒன்று. இந்த செய்தி எங்களை விட பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எத்தகைய வலியை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்போது வரை இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவயில் உள்ளது. கூடிய விரைவில் தீர்ப்பும் வெளியாகவுள்ளது. ஆனால் இப்போது வரை திலீப் குற்றம் சாட்டப்பட்டவராக தானே இருக்கிறார்.
தீர்ப்பு எப்படி வெளியானாலும் அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார். ஒருவேளை நடிகர் திலீப் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வெளியானால், அதன் பிறகு அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகலாம்.அதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இப்போது அவர் அம்மாவில் இணைக்கப்பட்டிருப்பது முற்றிலும் தவறு. கண்டிப்பாக இது தனி நபரின் முடிவாக இருக்காது. கடந்த ஜூன் 24 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பங்குப் பெற்ற நடிகர், நடிகைகளின் விபரங்கள் எங்களுக்கு தெரியும்.
ஆனால் அங்கிருந்த ஒருவர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு கரங்களை நீட்டி இருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் நடந்த போது, மலையாள நடிகர், நடிகைகள் பலர் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் இருப்பதாக கூறினார்கள். ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் மவுனம் சாதிப்பது ஏன் என்று தான் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு ’அம்மா’ காட்டும் ஆதரவு இதுதானா?
இதுப்போன்ற பல கேள்விகளை முன்வைத்து ஒரு கடிதமாக எழுதி நானும், நடிகைகள் பத்மபிரியா மற்றும் பார்வதி ஆகியோர் 'அம்மா' சங்கத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால் இப்போது வரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கடந்த வியாக்கிழமை நாங்கள் இந்த கடிதத்தை சங்கத்திற்கு அனுப்பிய மாலையே திலீப்பும் கடிதம் எழுதியுள்ளார், அதில் குற்றவாளி இல்லை என்று நிரூப்பிக்கும் வரை சங்கத்திற்குள் வரமாட்டேன் என்று.
பெண்கள் கலைஞர்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட இந்த டபிள்யூ.சி.சி அமைப்பில் எங்கள் 8 பேரை தவிர பல சினிமா துணை அமைப்புகளைச் சேர்ந்த 21 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். சினிமா துறை மட்டுமில்லை சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து குற்றங்களுக்கும் எதிராக நாங்கள் குரல் குடுப்போம்.
எங்களால் முடிந்த வரை பாதிக்கப்பட்ட நடிகைக்கும் அம்மா சங்கம் உறுதுணையாக இருக்க வலியுறுத்தியுள்ளோம். இனிமேல் சங்கம் தான் அடுத்த முடிவை அறிவிக்க வேண்டும். அம்மா சங்கம் இதுவரை பல விஷயங்களில் கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது. அதைப்போல் பெண் கலைஞர்களின் பாதுகாப்பிலும் சிறப்பாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்” என்று ஆதங்கத்துடன் தனது தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.