கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியது குறித்து விளக்கம் கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா இருவருக்கும் வில்பட்டி ஊராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சமீபத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பலரும், நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபிசிம்ஹா இருவரும் உரிய அனுமதி இன்றி நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் இல்லாமல் அதனை சுற்றியுள்ள சதுப்புநிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக புகார் கூறியுள்ளனர். மேலும் ஜேசிபி எந்திரத்தை பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுபாதையை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நடிகர் பாபி சிம்ஹா 3 மாடி கட்டி வருவதாக புகார் கூறியுள்ளனர்.
இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததை தொடர்ந்து இந்த புகார்கள் மீது 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவும், உரிய ஆவனங்களை சமர்பிக்கவும் வில்பட்டி ஊராட்சி சார்பாக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் நல ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் குறிப்பிட்ட இடத்தில் உள்ள பொதுபாதையை மக்கள் பயன்படுத்த எந்த தடையுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் பிரகாஷ்ராஜ் பாபி சிம்ஹா இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“