விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி ஆகியோர் நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் "மக்கள் செல்வனின்" 50வது படமாக வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் "மகாராஜா". இந்தப் படத்தின் விமர்சனம் வருமாறு.
கதைக்களம் :
கதைப்படி சலூன் கடை வைத்திருக்கும் முடிதிருத்துபவராக வருகிறார் நாயகன் மகாராஜா (விஜய் சேதுபதி). தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் மகாராஜா, லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் 7 லட்சம் பணம் தருவதாகவும் கூறுகிறார்.போலீஸ் லட்சுமியை கண்டுபிடித்தார்களா ? உண்மையாவாகவே லட்சுமி என்பது யார் ? என்பதற்கு படத்தின் மீதி கதை விடையளிக்கும்
நடிகர்களின் நடிப்பு :
மகாராஜா என்ற கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகச்சிறப்பாக அக்கதாபத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அடிபட்ட காதில் கட்டு போட்டுக்கொண்டு மகளுக்கான நீதியை தேடி அலையும்போதும், காவல் நிலையத்தில் காவலர்களால் அவமானப்படும்போதும் நடிப்பில் தான் ஒரு மகா கலைஞன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
வில்லனாக அனுராக் காஷ்யப்பின் நடிப்பு அட்டகாசம். வில்லன் அழுகின்ற போதும் கூட ரசிகர்களின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்க்கிறது, அந்த அளவிற்கு நடிப்பில் அமர்களப்படுத்தியுள்ளார். பாரதிராஜா மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோருக்கு சிறிய ரோல் என்றாலும் அதை கச்சிதமாக செய்துள்ளனர். சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த், அபிராமி, திவ்ய பாரதி ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை :
2017ல் "குரங்கு பொம்மை" என்ற அட்டகாசமான திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் நித்திலனுக்கு, தனது கரியரின் மிக முக்கிய திரைப்படமான 50வது படத்தை விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார். படம் தொடங்கிய சில நிமடங்களிலேயே, இது தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக அமையப்போகிறது என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.
தான் எடுத்துக்கொண்ட இயல்பான கதையை எவ்வளவு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ அதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது.
படத்தின் ப்ளஸ்:
⦿ விஜய் சேதுபதியின் நடிப்பு
⦿ கலகலப்பான முதல் பாதி
⦿ எதிர்பாராத ட்விஸ்ட்கள்
⦿ லாஜிக் மீறாத காட்சிகள்
⦿ வேற லெவல் இரண்டாம் பாதி
படத்தின் மைனஸ் :
⦿ குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை
இரண்டாம் பாதி முழுவதும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து நம்மை திகைக்கவைக்கிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த திரில்லர் திரைப்படங்களில் மகாராஜாவுக்கு நிச்சயம் இடம் உண்டு. மொத்தத்தில் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய ஒரு தரமான படம் மகாராஜா.
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“