நவீன் குமார்
குடும்ப பாங்கான ஜாலியான படங்களில் மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி முதல்முறையாக “ரன் பேபி ரன்” படத்தில் முழு நீள சீரியஸ் திரில்லர் ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பின்வரும் விமர்சனத்தில் காணலாம்.
படத்தின் கதை:
வங்கியில் வேலை செய்யும் நாயகனாக வரும் ஆர்.ஜே பாலாஜி, தான் கல்யாணம் செய்யவிருக்கும் பெண்ணுடன் நகை எடுக்க நகை கடைக்கு வருகிறார். அங்கு எதிர்பாராத விதமாக அவரது காரில் இன்னொரு பெண் ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அந்த பெண் யார்? எதற்காக அந்த காரில் ஒளிந்திருந்தால்? என்பது போன்ற சுவாரசியமான விஷயங்களை திரில்லராக சொல்லியிருக்கும் படமே “ரன் பேபி ரன்”.
ஆர்.ஜே.பாலாஜி:
காமெடி கலந்த குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி திரில்லர் படத்திற்கு செட் ஆவாரா?என்ற கேள்வி, படம் தொடங்கிய நாளிலிருந்தே எழுந்திருந்தது. ஆனால், தன்னால் முழு நீள திரில்லர் படத்திலும் கச்சிதமாக நடிக்க முடியும் என்பதை திரையில் நிரூபித்திருக்கிறார். பல இடங்களில் அவருடைய முக பாவணையும், உடல் மொழியும் திரைக்கதையின் பரபரப்பை நம்முள் கடத்துகிறது. திரைக்கதைக்கு எந்த மாதிரியான நடிப்பு தேவைப்படுகிறதோ அதை கச்சிதமாக வழங்கி இம்முயற்சியில் நடிகனாக வெற்றி பெற்றிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்:
தொடர்ந்து பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இப்படமும் ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. நிறைய இடங்களில் அவருடைய எதார்த்தமான நடிப்பு நம்மை கதையோடு கனெக்ட் செய்கிறது.
துணை நடிகர்கள்:
ராதிகா, பகவதி பெருமாள், இஷா தல்வார், ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ், விவேக் பிரசன்னா, பாலா என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை இக்கதைக்கு வழங்கியுள்ளனர்.
சாம். சி.எஸ் – இசை:
பொதுவாகவே திரில்லர் படங்களுக்கு பின்னணி இசைதான் முதுகெலும்பாக அமையும். அதை தன்னுடைய மிரட்டலான இசையின் மூலம் இப்படத்திலும் கொடுத்திருக்கிறார். எல்லா காட்சிகளிலுமே இவருடைய பின்னணி இசை தனியாக நம்மை ரசிக்க வைக்கிறது. ஒரு சுமாரான காட்சியைக்கூட தனது இசையின் மூலம் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார். மொத்தத்தில் பின்னணி இசை வேற லெவல்.
இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார்:
திரில்லருக்கான அத்தனை அம்சங்களையும் அழகாக அமைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார். படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவில் நடப்பதாக அமைந்திருந்தாலும் அதையும் “யுவா”வின்
ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
பாசிடிவ்ஸ்:
திரில்லருக்கான கச்சிதமான திரைக்கதை. படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதபதப்பை ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு கொடுக்கின்றன. இடைவேளைக்கு முன்னர் வரும் டிவிஸ்ட் அருமை. சாம்.சி.எஸ்’ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பரபரப்பான காட்சிகள் படத்தை ரசிக்க உதவுகின்றன.
நெகட்டிவ்ஸ்:
படத்தின் முதல் பாதி கொடுத்த அந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதி கொடுக்க தவறுவதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை. சில காட்சிகள் லாஜிக் இல்லாமல் சினிமாத்தனமாக இருப்பதால் படம் சற்று பாதிப்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக முடிந்திருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு திரில்லருக்கான அனைத்து விஷயங்களும் படத்தில் இருந்தாலும் ஆங்காங்கே சற்று ஏற்ற இறக்கங்கள் உள்ளதால் ஒரு சுமாரான திரில்லர் படமாக இப்படம் முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“