நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தனது படத்தில் நடித்தபோது, அவருடைய நடிப்புத் திறனைக் கண்டு வியந்ததாகக் கூறி பாராட்டியுள்ளார். குழந்தை ஷாலினி கேமராவுக்கு முன்னால் நடிக்கும்போது, அழச்சொன்னால் உடனே அழுதுடுவா என்று பாராட்டியுள்ளார்.
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், தனது வாழ்க்கை அனுபவங்களை யூடியூப் சேனலில் யார் இந்த எஸ்.ஏ.சி என்று பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில் எஸ்.ஏ.சி புதியதாக வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தனது படத்தில் நடித்ததைப் பற்றி கூறியுள்ளார்.
அதில் எஸ்.ஏ.சி கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் எஸ்.ஏ. சந்திரசேகர் என்றாலே சட்டம் சம்பந்தமான படம் எடுப்பவர் என்று ஒரு முத்திரை குத்திவிட்டார்கள். இவருக்கு சட்டம் கோர்ட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். இந்த முத்திரையை உடைப்பதற்காக, நிலவே மலரே என்ற படத்தை இயக்கினேன். இந்த படம் முழுவதும் சட்டம், கோர்ட் இல்லாமல் உணர்வுகளை மையமாக வைத்து எடுத்தேன். இந்த படத்தில், இன்று சமூகத்தில் பெரிய மதிப்பும் செல்வாக்கும் உள்ள ஷாலினிதான் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவருக்கு 5 வயது. நிலவே மலரே படத்துக்கு எம்.எஸ்.வி இசையமைத்தார்.

இந்த படத்தில் ரகுமானை அறிமுகப்படுத்தினேன். நிலவே மலரே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் பேபி ஷாலினி. அவர் பிரமாதமாக நடிப்பார். நடி என்றால் உடனடியாக நடிப்பார். அழு என்றால் உடனடியாக அழுவார். கோபமாகப் பார் என்றால் உடனே கோபமாகப் பார்ப்பார். சிரி என்றால் உடனே சிரிப்பார். அந்த அளவுக்கு அபாரமான திறமை கொண்ட நடிகை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.
மேலும், எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்த், ரகுமானை வைத்து இயக்கிய வசந்த ராகம் திரைப்படத்தில் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்ததைப் பற்றி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”