தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் அப்பாவும் ஆன, எஸ்.ஏ.சந்திரசேகரன், ’யார் இந்த எஸ்.ஏ.சி’ எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் தான் கடந்து வந்த பாதைகளை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் எஸ்.ஏ.சி. சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த புதிதில், , யார் ஆதரவுமில்லாமல், பாண்டி பஜார் சாலையில் பல நாட்கள் படுத்து உறங்கியது, அரை இட்லி கூட சாப்பிடமால், வெறும் கார்பிரேஷன் தண்ணீர் மட்டுமே குடித்து 7 நாட்கள் இருந்தது என பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இப்போது சமீபத்தில் எஸ்.ஏ.சி தனது சேனலில் வெளியிட்ட புதிய யூடியூப் வீடியோவில்’ சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன், நம்பிக்கையுடன் இருந்ததையும், அதேபோல தன் மகன் விஜய்க்கும் அதே பிடிவாதம் இருந்ததையும் என பல விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசினார்.
அந்த வீடியோவில் பேசிய எஸ்.ஏ.சி: கிராமங்கள’ பிடிச்சா புளியங்கொம்ப பிடினு சொல்லுவாங்க. நீலகண்டன், என்னைய நாளைக்கு வந்து பாருனு சொன்ன உடனே, எனக்கு சினிமாவுல ஏதோ ஒரு இடத்துல உட்காந்திருவோங்கிற நம்பிக்கை. சினிமாவுல நுழைவதற்கான ஏதோ ஒரு சின்ன கதவு திறந்ததை போல உணர்வு.
அரை இட்லி கூட சாப்பிடாமல் 7 நாட்கள்… எஸ்.ஏ.சி நிஜக் கதை!
எட்டிப்பாக்குறதுக்கு ஒரு ஜன்னலாவது திறந்துடுச்சே. நான் வாய்ஸ் ஸ்டூடியோல ப்ரோகிராம் சார்ஜரா இருக்கேன். அதே வாய்ஸ் ஸ்டுடியோல காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் வெயிலுயே நின்ன நாட்களேயே நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, இப்போ அந்த வாசல்ல நுழைவதற்கான ஒரு வாய்ப்பு. அன்னைக்கு நான் கண்ட கனவு, நிறைவேற போதிரி மாதிரி ஒரு நம்பிக்கை.
ஒரு காட்டுக்குள்ள நாம போயிட்டு இருக்கிறோம். வழி தெரியல. ஆனா, ஒரு ஒத்தையடி பாதை தெரியுது. அந்த ஒத்தையடி பாதையில நாம பிரயாணம் பண்றோம். கொஞ்ச தூரம் காட்டுக்குள்ள போன உடனே, அந்த ஒத்தையடி பாதை அப்படியே நின்றுது. சுத்தி எந்த பக்கம் பாத்தாலும் கண்ணுக்கு எந்த பாதையும் தெரியல.
அய்யய்யோ அப்புறம் போறதுக்கு பாதை இல்லையேனு தயங்கி நின்னுட்டோம்னா’ நம்ம க்ளோஸ்.
நம்பிக்கையோட, தில்லோட, ஒரு காலடி எடுத்து வச்சோம்னா’ நமக்குனு தனியா ஒரு பாதை பிறக்கும். எனக்கு அதுல ஆழமான ஒரு நம்பிக்கை. அதைத்தான் அப்துல் கலாம் சொல்றாரு. கனவு காணுங்கள்; அந்த கனவை நோக்கி பயணப்படுங்கள்; எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி செல்லுங்கள்; எத்தனை முறை தடுமாறி கிழே விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து முயற்சி செய்யுங்கள்;
தடைகள், அசிங்கங்கள், அவமானங்கள் வரலன்னா நாம மேல வரமுடியாது. எத்தனையோ நடிகர்கள், கருப்பா இருக்கிறான். இவன் எங்கடா வரப்போறானு ரஜினிய கேட்டாங்க. ஆனா, அவரு பின்னாடி சூப்பர் ஸ்டார் ஆனாரு. நான் ஜெயிப்பேன் நம்பிக்கையோட அவரு இருந்தாரு. அதேமாதிரி ஜெயிச்சுட்டாரு.
அவரே மாதிரியே, அதுக்கு முன்னாடி, சிவாஜி நடிக்க வந்த புதிதுல, உன் மூஞ்சிய கண்ணாடில பாத்துருக்கியா; அப்படி பாத்திருந்தா நீ நடிக்கவே வந்துருக்க மாட்டேனு கேட்டுருக்காங்க.. ஆனா, இப்போ நடிப்புக்கான ஒரு பல்கலைக்கழகமா அவரதான் எல்லாரும் சொல்றாங்க..
1962ல அமெரிக்க அரசாங்கம் சிவாஜி கணேசனை தங்கள் நாட்டுக்கு அழைக்குது. நயகரா நீர்வீழ்ச்சி பாக்கணும்னு சிவாஜிக்கு ஆசை; அந்த நயகரா சிட்டிய இவரு பாக்கும்போது, நயகரா சிட்டியின் ஒரு நாள் மேயரா சிவாஜி கெளரவிக்கப்படுறாரு.
சிவாஜி ஒரு இமயமலைன்னா, நான் ஒரு திரிசூல மலை மாதிரி. தென்கோடியில 80 வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்ன கிராமம் தங்கச்சிமடம். அதான் நான் பிறந்த இடம். என் அம்மா ஒரு வாத்தியார். என் அப்பா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். எனக்கு 2 அண்ணன், ஒரு தங்கச்சி.
எங்க அண்ணன் நல்ல படிச்சு செட்டில் ஆயிட்டாரு. ஆனா, எனக்கு 12 வயசுல இருந்தே’ எண்ணமெல்லாம் சினிமா சினிமாதான். வீட்டுக்கு தெரியாம ஓடி வந்தேன். சொன்னா அனுப்ப மாட்டாங்க.
அப்போ நான் நினைச்சி பாத்தேன். பிற்காலத்துல’நாம எம்ஜிஆரை நேருல பாப்போம், கலைஞரோட பழகுவோம். கலைஞரோட வசனத்துல, டைரக்ட் பண்ணுவோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட பழகக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். அவர் படத்துல நம்ம அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை பண்ணுவோம். பிற்காலத்துல அவரு வச்சு நம்ம டைரக்ட் பண்ணுவோம். இது மட்டுமா? இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் என் கதையில நடிப்பாரு; ராஜேஷ் கண்ணாவ வச்சு நான் டைரக்ட் பண்ணுவேன். தெலுங்கு, கன்னட படம் டைரக்ட் பண்ணுவேனெல்லாம் கனவுல கூட நினைச்சி பாத்தது கிடையாது.
ஆனா, இதெல்லாம் என் வாழ்க்கையில நடந்தது. அதுக்கு காரணம் நம்பிக்கை, பிடிவாதம். இந்த ரெண்டும் ஒரு மனுஷனுக்கு வேணும்.
நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும்போது இன்னொரு அசோசியேட் டைரக்டர் என்னை கேவலப்படுத்துனாரு. ஒரு நாள் செட்ல அவர்கிட்ட போய் டவுட் கேட்கும்போது பளார்னு கண்ணத்துல அடிச்சு’ ஒன்னும் தெரியல. நீயெல்லாம் எப்படிடா டைரக்ஷன் டிப்பார்ட்மெண்டுக்கு வந்த, எங்கயாவது ஹோட்டல்ல போயி தட்டு கழுவுடானு சொல்லிட்டாரு.
அவர் சொல்லிட்டாருனு நான் ஹோட்டலுக்கு தட்டு கழுவ போகல. உனக்கு முன்னாடி நான் வந்து காட்டுறேண்டானு’ எனக்குள்ள ஒரு வைராக்கியம். சில நியாயமான பிடிவாதம் இருக்கிறது தப்பே இல்லை. அதனால தான் இன்னைக்கு நான் நல்லா இருக்கேன். விஜய்க்கும் அதே பிடிவாதம் தான். என்னோட ஜீன் தானே.
என் மகனோட பிடிவாதம் தான் இன்னைக்கு அவர் இருக்கிற இடத்துக்கு காரணம். 1992ல விஜய் நடிகன் ஆகணும் சொல்றாரு. நான், முடியாது. நீ டாக்டர் ஆனா, நான் உனக்கு ஹாஸ்பிடல் கட்டித்தரேனு சொல்லிட்டேன். அதை கேட்டுட்டு விஜய் ஒரு டாக்டரவோ, இன்ஜினியராவோ, ஒரு லட்சம் சம்பளத்தை வாங்கிட்டு அப்படியே’ காலத்தை ஓட்டிருக்கலாம். ஆனா விஜய் அப்படி பண்ணல.
விஜய் பிடிவாதமா இருந்தாரு. ஒருவிதத்துல எங்களை மிரட்டுனாரு. என்னை தேடாதீங்கனு லட்டரை எழுதி டைனிங் டேபிளை வச்சுட்டு வீட்ட விட்டு போயிட்டாரு. நாள் முழுக்க நானும், ஷோபாவூம் தேடுறோம். ஓரே பிள்ளை. எப்படி இருக்கும்?
நாள் முழுக்க அலைஞ்சு அலைஞ்சு, கடைசியில உதயம் தியேட்டர்ல அவர் படம் பாத்துட்டு இருக்காருனு நியூஸ் வந்தது. அதுக்குபிறகு அங்க போய் கூட்டிட்டு வந்தோம்.
அதுதான். அந்த வைராக்கியம் தான் . எங்களை மிரட்டுனாரோ, இல்லை பயமுறுத்துனாரோ ஏதோ ஒன்னு, வைராக்கியம் அதை பண்ணாம இருந்திருந்தா, இன்னைக்கு இருக்கிற விஜய்ய உங்களால பாத்துருக்க முடியாது. இந்த வைராக்கியம் தான் இளைஞர்களுக்கு வேணும்.
அப்போ நம்பிக்கை, பிடிவாதம் இருந்தா மட்டும் போதுமா? எப்படி இந்த இடத்துக்கு வந்த? என்று எஸ்.ஏ.சி.அந்த வீடியோவை முடிக்கிறார்.
இதோ எஸ்.ஏ.சி பேசும் அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.