நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? என்று அவரின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமாவில் உட்சபட்சமாக திகழும் பிரபலங்கள் திடீரென்று அரசியலில் குதிப்பது தமிழகத்தில் தமிழ் சினிமாவிலு, தமிழக அரசியலிலும் புதியவை அல்ல. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தொடங்கி இன்று கமல், ரஜினி என அனைவரும் சினிமாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்று அடுத்தக்கட்டமாக அரசியலுக்குள் நுழைந்தார்கள்.
விஜய் அரசியல்:
சமீபத்தில் நடிகர், கமல்ஹாசன் மக்கள் மைய்யம் இயக்கத்தை தொடங்கினார். நடிகர் ரஜினிகாந்த வரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றார். இந்த பரபரப்புக்கள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கையில் கடந்த வாரம் நடிகர் விஜய் சர்கார் பட இசைவெளியீடு விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் அதிக நபர்களால் கருத்துச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வாகவே மாறியது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? போன்ற விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
தந்தையுடன் நடிகர் விஜய்
இதனைத்தொடர்ந்து தற்போது விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றொரு வெடியை கொளுத்தி போட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழ்ந்த மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அந்த சந்திப்பில் அவர் பேசியதாவது, “ மருத்துவர்கள், ஆசிரியர்கள், சாதாரண தொழிலாளி உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வரலாம் என்றபோது நடிகர் அரசியலில் வருவதில் மட்டும் சிலருக்கு ஏன் கோபம் வருகிறது.
விஜய் அரசியல் வருவது ஒருபுறம் இருக்கட்டும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி வரும்போது சிலர் கோபம் கொண்டு எதிர்ப்பது ஏன். தமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஒரு தமிழனாகிய எனது விருப்பம். விஜய் அரசியலில் இறங்கினால் அதில் என்ன தவறு? ” என்றும் கேள்வி எழுப்பினார்.