சமீபகாலமாக தமிழ் திரையுலகில் புதுமையான குரல்களும், இசைத் திறமைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், கட்சி சேர, ஆச கூட, ஆல்பம் பாடல்களால் இளம் தலைமுறையின் மனதைக் கவர்ந்தவர் சாய் அபயங்கர்.
அந்தப் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யாவின் கருப்பு, பிரதீப் ரங்கநாதனின் டூட், மலையாளத்தில் பல்டி, கார்த்தியின் 29-வது படமான மார்ஷல், சிவகார்த்திகேயனின் 24-வது படம் என ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர்.
இதுபோக, இந்திய சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படமான அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளரும் சாய்தான் என்கின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட இசையமைத்து வெளிவராத ஒரு இசையமைப்பாளருக்கு அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்பந்தமாவது திரையுலகினரை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இசையமைப்பது என்பது வெறும் மெட்டுப் போடுவது மட்டுமல்ல; ஒரு பாடலின் ஆன்மாவை உணர்ந்து, அதை வரிகளுடன் கோர்த்து, கேட்கும் ஒவ்வொருவரையும் கட்டிப் போடும் மாய வித்தையாகும். சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது, அவரது இசைப் பயணத்தின் அடுத்த படி.
அந்தவகையில் சாய் அபயங்கர் தொடர்ந்து தனது திறமைகளை மெருகேற்றி, புதுமையான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், அவர் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.