ஏ.ஆர். ரஹ்மான் மிகச்சிறந்த மனிதர் எனவும், அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை யாரும் பரப்ப வேண்டாமெனவும் அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து பெறப்போவதாக அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். மேலும், இது தொடர்பாக பதிவு ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர்களது விவாகரத்து தொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தங்கள் பிரிவு குறித்து சாய்ரா பானு முதன்முறையாக விளக்கம் அளித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் வசித்து வருகிறேன். ரஹ்மானிடமிருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ள விரும்பினேன்.
அனைத்து யூடியூபர்கள் மற்றும் தமிழ் ஊடகத்தினருக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ரஹ்மான் குறித்து தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். அவர் உலகிலேயே சிறந்த மனிதர். என் உடல் நிலை காரணமாகவே சென்னையில் வசிக்க முடியாத சூழல் உருவானது.
நான் சென்னையில் இல்லையென்றால் வேறு எங்கு இருக்கிறேன் என கேள்வி எழும். எனது மருத்துவ சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன். ரஹ்மானின் பிஸியான வேலைகளில் சென்னையில் இருந்து சிகிச்சை பெறுவது சாத்தியமில்லை. மீண்டும் சொல்கிறேன் ரஹ்மான் மிகச்சிறந்த மனிதர். அவரது போக்கில் அவரை வாழ விடுங்கள்.
ரஹ்மான் மீது மிகுந்த நம்பிக்கையும், அன்பும் கொண்டுள்ளேன். ரம்ஹான் மீது சுமத்தப்படும் போலி குற்றச்சாட்டுகளை உடனே நிறுத்துங்கள். அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவதை நிறுத்துங்கள். எனது சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னை திரும்புவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“