Aishwarya Rai – Abhishek Bachchan: பாலிவுட் திரையுலகில் நட்சத்திரங்களுக்கு இடையேயான காதலும், பிரேக்கப்பும் சாதாரணமான ஒன்று. அப்படி காதலில் இருந்து பிரேக் அப் ஆனவர்கள் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும்.
சமீபத்தில் தான் கலந்துக் கொண்ட நேர்க்காணலில் ஐஸ்வர்யா, அபிஷேக்கை மணந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சல்மான் கான். இந்தியா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ”அபிஷேக் பச்சன் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த சிறந்த மனிதர் என்பதால், அவரை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் என்றென்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் கானின் காதல் வாழ்க்கை குறித்து விவாதிக்கப்படும் போதெல்லாம், ஐஸ்வர்யா ராயுடனான அவரது உறவும் தவறாமல் நினைவு கூறப்படுவது வழக்கம். ஏனெனில் அவர்கள் ஒரு காலத்தில் பெரிதும் பேசப்படும் ஜோடிகளாக வலம் வந்தனர். அவர்களின் பிரிவை இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தனர்.
பின்னர் அந்த நேர்க்காணலில் கத்ரீனா கைஃப் உடனான உறவு குறித்து கேட்டபோது, அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்றார். “நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் உள்ள நிலையில், சல்மான் – கத்ரீனா உறவு தேசிய செய்தியாக்கப்படுவது ஏன்?” என்றார்.
”சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் காத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சல்மான், ஷாருக்கானுக்கும் தனக்கும் இருக்கும் கோல்ட் வாரையும் நினைவு கூர்ந்தார். கடந்த காலங்களில் தங்களுக்கிடையே உண்டான பிரச்னைகளை ஒத்துக் கொண்ட சல்மான் கான், ”ஒரு நடிகராக ஷாருக்கானை மதிக்கிறேன்” என்றார்.
சல்மான் கான் தற்போது ’தபாங் 3’ படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது!